”தீர்மானம் நிலுவையில் இருந்தால் அதற்கான அர்த்தம் இதுதான்”- மீண்டும் சர்ச்சைக்கு வித்திடுகிறதா ஆளுநரின் பேச்சு!

தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை கண்காணித்து, விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.
Governor R.N.Ravi
Governor R.N.RaviPT Desk

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய ஆர்.என்.ரவி அவ்வப்போது மாநிலத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசை சீண்டும் விதமாகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு நாடே எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதற்கு ஆதரவாக பேசி சர்ச்சையை கிளப்புவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற ஆளுநரின் ' எண்ணித் துணிக' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் அமைதியான சூழலில் பணியாற்றுகிறேன்

அப்போது பேசிய அவர், “ஆளுநராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. கேரளாவில் பணியை தொடங்கி மத்திய அரசு பணிகளுக்கு சென்று நாட்டின் பிரச்சனைகள் உள்ள பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் அமைதியான சூழலில் பணியாற்றுகிறேன்.

தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளம் மிக்க மொழி, அதன் தொன்மை வியப்பை தருபவையாக உள்ளது. ஆளுநராக இங்கு மகிழ்ச்சியுடன் பணியாற்றுகிறேன். இங்குள்ள மக்களால் எங்கு எனக்கு சென்றாலும் வரவேற்பு அளிக்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது.

Governor R.N.Ravi
Governor R.N.RaviPT Desk

தினமும் 14 மணி நேரம் தேர்வுக்கு தயாராகுங்கள்!

60 வயதில் உங்கள் பணி நிறைவடையும். ஆகையால் குறைவான வயது இருக்கும் போதே விரைவாக பணியை பெற முயற்சி செய்யுங்கள். ஏனெனில் 33 ஆண்டு பனிக்காலம் இருந்தால் மட்டுமே உயர்ந்த பதவிகளை அடைய முடியும். உண்மையாக தேர்வுக்கு தயராகுங்கள். எல்லோரும் முயற்சி செய்கிறார்கள் என நீங்களும் செய்யாதீர்கள்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 14 மணி நேரமாவது தேர்வுக்கு தயராக வேண்டும். அதே நேரத்தில் உடல் நலனையும் கவனிக்க வேண்டும். 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரமாவது உடல் உழைப்பு கொடுங்கள். ஆனால் அதிகப்படியான உடல் உழைப்பை செலுத்தி சோர்வடையவும் வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.” இவ்வாறு பேசியிருந்தார்.

இதனையடுத்து, “இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் முதல் கடமை. மத்திய அரசோ, மாநில அரசோ இந்திய அரசியல் அமைப்பின் படியே இயங்க முடியும். இந்தியாவில் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் உள்ளது. பொது பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை என்றால் மாநில அரசு சட்டம் இயற்றலாம். மத்திய அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் அது மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும்.

Governor R.N.Ravi
Governor R.N.RaviTwitter

ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தின் ஒரு அங்கம்!

சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டும் என்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின் படி ஆளுநரின் கடமையாகும். தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது.

இந்திய அரசியல் அமைப்பின்படி மாநிலத்தின் சட்டமன்றம் என்பது ஆளுநர், சட்டசபை, சட்டமன்ற குழு ஆகியவை அடங்கியது. எனவே ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தின் ஒரு அங்கம். சட்டசபையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டம் ஆகாது. சட்டசபையும் ஒரு அங்கம் மட்டும்தான். அதனால்தான் ஆளுநருக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள்!

ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. ஒன்று, தீர்மானம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம். இன்னொன்று நிலுவையில் வைப்பது. தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. நிலுவையில் உள்ளது என்றால் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம். மூன்றாவது வாய்ப்பு குடியரசு தலைவருக்கு அனுப்புவது. பொதுப்பட்டியலில் உள்ளது என்றால் அதன் மீது முடிவெடுப்பதற்காக குடியரசு தலைவரின் கருத்திற்காக அனுப்புவது.” என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.

Governor R.N.Ravi
”ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா” - ஆளுநர் ரவி பேச்சு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com