“தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது” - திருமாவளவன்

தமிழகத்தில் மூன்றாம் அணி அமைய வாய்ப்பில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
திருமாவளவன்Twitter

செய்தியாளர் - சுகன்யா

அசோக் நகர் விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்காக வீர மரணம் அடைந்த முத்துக்குமாரின்  நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிகழ்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்தார்.

திருமாவளவன்
“விழா நாயகன் அரசமைப்பு சட்டம்தான்” – ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன்

தொடர்ந்து பேசுகையில், “விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இதுவே பாஜகவுக்கு கடைசி அமர்வு என்கிற வகையில், மக்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களித்து பாஜகவை அகற்ற வேண்டும். அதுவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.

நிதீஷ் குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகியது அவருக்குத்தான் நஷ்டத்தை கொடுக்கும். சில ஆண்டுகள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு வரலாற்று பிழையை செய்து விட்டார். தேர்தலுக்குப் பின்னர் அவர் மிகவும் வருத்தப்படும் நிலை உருவாகும். நிதீஷ் குமார் இல்லை என்றாலும் கூட I.N.D.I.A. கூட்டணி இந்த தேர்தலை கம்பீரமாக எதிர்கொள்ளும்.

திருமாவளவன்
புதிய சாதனை: 9 ஆவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

I.N.D.I.A. கூட்டணியை விட்டு மம்தாவும் வெளியே வரவில்லை, ஆம் ஆத்மியும் வெளியே வரவில்லை. சில இடங்களில் காங்கிரஸுக்கு போதுமான இடங்களை ஒதுக்க முடியாத சூழலில்தான் அவர்கள் தனியாக போட்டியிடுகிறார்கள். எனவே அவர்கள் I.N.D.I.A. கூட்டணியை விட்டு வெளியேறவில்லை.

திமுகவின் உடனான தேர்தல் பேச்சு வார்த்தை அழைப்பு வந்தவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்” என்றார்.

பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆட்டோ மதிவாணன் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் அதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இப்போது போராட்டம் குறித்த தேவை இல்லை” என தெரிவித்தார்.

மேலும் இடைக்கால பட்ஜெட்டில் குறித்த கேள்விக்கு “ஏமாற்றம்தான் இருக்கும். தென்னிந்திய மாநிலங்களுக்கு தேவையான எந்த புதிய திட்டங்களும் இருக்காது. எய்ம்ஸ் அறிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதே தவிர அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பாஜக 10 ஆண்டுகளாக அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் ராமர் அயோத்தி போன்றவற்றை கையில் எடுத்துள்ளனர்” என்றார்.

நீடித்து வரும் சங்கி என்ற சொல் மீதான சர்ச்சைக்கு பதிலளித்தவர், “சங்கி என்கிற வார்த்தை பாஜகவினருக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சனாதன சக்திகள், ஏற்றத்தாழ்வை ஏற்றிப் பிடிக்கும் சக்திகள், பாகுபாடுகளை உயர்த்திப் பிடிக்கும் சக்திகள், மதவெறியை தூண்டும் சக்திகள், ‘கோவில் - கடவுள்’ என்னும் பெயர்களால் மக்களை மயக்கும் சக்திகள் ஆகியவைதான் சங்கிகள்.

இந்து மதத்தை பயன்படுத்தும் சங்பரிவார் அமைப்புகளை இந்து மதத்தில் இருக்கும் மதப் பெரியவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “தமிழ்நாட்டில் எப்போதும் திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி என்பதுதான் எடுபடும். பாஜக அதில் ஒரு பொருட்டே கிடையாது. மூன்றாவது அணி ஒன்று உருவாகினாலும், அது ஒரு அணியாகவே இருக்காது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com