விஜய்
விஜய்pt web

கூட்டணி பேச்சு வார்த்தைகளில் தவெக.. சூடாகும் அரசியல் களம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணி முஸ்தீபில் இருக்க புதிதாக களம் காணும் தவெகவும் தன் தரப்புக்கு பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கிறது.
Published on

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணி முஸ்தீபில் இருக்க புதிதாக களம் காணும் தவெகவும் தன் தரப்புக்கு பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிமுகநூல்

திமுக, அதிமுக இரு கட்சிகளும் சென்ற அரை நூற்றாண்டாகவே தனிக் கட்சி எனும் அரசியல் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ள நிலையில், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' எனப் புதிய கதையாடலுடன் களம் இறங்கியது தவெக. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக்கே முன்னுரிமை அளிக்கும் சிறு கட்சிகளைத் தன் பக்கம் ஈர்க்க விஜய் முன்னெடுத்த இந்த வியூகம் களத்தில் நன்றாகவே வேலை செய்கிறது என்று சொல்லலாம். திமுக, அதிமுக இரண்டின் கூட்டாளிகளும் மெல்ல கூட்டணியாட்சி எனும் கோரிக்கையை முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றன. கூட்டணிக்கு சின்ன கட்சிகளிடம் ஒருபுறம் பேசிக்கொண்டே இன்னொருபுறம் பெரிய கட்சிகளுடன் கை கோப்பதற்கான உத்தியையும் கையில் எடுத்திருக்கிறது தவெக.

திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததன் மூலம், அதிமுக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் வெளிப்படையான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறார் விஜய்.

விஜய்
திருச்சி சிவா பேச்சால் வெடித்த விவாதம்.. வரலாற்றில் திமுகவும், காமராஜரும்!

பகாசுர கூட்டணி பலத்துடன் களத்தில் நிற்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த மிக வலுவான கூட்டணி வேண்டும் என்பதை உணர்ந்திருக்கும் அதிமுக தொடர்ந்து தவெகவுடனான பேச்சுகளில் ஈடுபட்டுவருகிறது. அதிமுக – தவெக இடையில் கூட்டணி பேச்சு நெருக்கமாகிக்கொண்டிருந்த சூழலில்தான், அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், பாஜக தனி அணியை அமைக்க வேண்டிவரும் என்றுணர்ந்து முன்கூட்டியே டெல்லிக்கு பழனிசாமியை அழைத்து, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்தார் அமித் ஷா. தவெகவையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தொடர்ந்து முயன்றாலும், விஜய் இதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், பாஜக அல்லாத கூட்டணியில் அதிமுகவுடன் கை கோக்க தங்களுக்கு ஆட்சேபம் இல்லை எனும் சமிக்ஞைகளை விஜய் தரப்பு அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆக, அதிமுக – தவெக கூட்டணிக்கான கதவுகளை இரு தரப்பும் திறந்துவைத்து வழியில் நின்றிருக்கும் பாஜகவை சங்கடத்தோடு பாத்திருக்கின்றன.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

இத்தகு சூழலில், ஏன் தவெக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸை அழைக்கக் கூடாது என்று தவெகவில் இன்னொரு தரப்பு விஜய் – ராகுல் சந்திப்புக்கான முயற்சியில் இறங்கியிருப்பதை டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. எப்போதும் விஜய் மதச்சார்பற்ற அணியிலேயே இருப்பார், ராகுல் பேசும் சமூகநீதி கொள்கை விஜய்க்கு விரோதமானவை அல்ல; தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மதித்தால், எம்ஜிஆர் காலத்தில் நடந்ததுபோல, எல்லா காலத்திலும் உற்ற தோழனாக விஜய் இருப்பார்; எல்லாவற்றுக்கும் மேல் கூட்டணி ஆட்சி – காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்கு – இரு துணை முதல்வர்களில் ஒருவர் காங்கிரஸை சேர்ந்தவராக இருக்கலாம் என்றெல்லாம், தவெக தரப்பில் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்
“திருத்தம் செய்வது குற்றம்; கீழடி ஆய்வறிக்கையை முதலில் படியுங்கள்..” - அமர்நாத் ராமகிருஷ்ணன்

காங்கிரஸும் ராகுலும் இதற்கெல்லாம் சம்மதிப்பார்களா என்பது பெரிய கேள்விதான். ஏனென்றால், ராகுலைப் பொறுத்த அளவில் ஆட்சி அதிகாரத்தைவிட இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான நெடிய போராட்டத்துக்கே காங்கிரஸைத் தயார்படுத்த அவர் முன்னுரிமை தருகிறார். இந்த இடத்தில் திமுவை சித்தாந்த நெருக்க கூட்டாளியாக அவர் கருதுகிறார். மேலும், காங்கிரஸுக்கு மிக மோசமான காலகட்டமாக அமைந்த சென்ற பத்தாண்டுகளில் திமுக காங்கிரஸ் பக்கம் நின்றுள்ளது. 2019இல் காங்கிரஸ் வென்ற 52 இடங்களில் 10 இடங்கள்; 2024இல் காங்கிரஸ் வென்ற 99 இடங்களில் 10 இடங்களில் தமிழகத்திலிருந்து அதற்கு கிடைத்தவை. தவிர, இந்தியா கூட்டணியில் வலுவான கூட்டாளி திமுக. தமிழகம், புதுவையிலிருந்து 39 இடங்களை காங்கிரஸ் கூட்டணிக்கு உத்தரவாதமாக தரும் பங்காளியாக திமுக இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி ஸ்டாலின் – ராகுல் இடையே ஆத்மார்த்தமான ஓர் உறவு இருக்கிறது. காங்கிரஸே முன்மொழிய தயங்கிய நிலையிலும், 2019இல் கூட்டணியின் பிரதமர் முகமாக ராகுலை முன்னிறுத்தியவர் ஸ்டாலின். மேலும், காங்கிரஸுக்கு எப்போதுமே மாநில அரசியலைவிட தேசிய அரசியலே முன்னுரிமைக்கு உரியது; இத்தகு பின்னணியில் தவெகவின் முயற்சிகள், முன்மொழிவுகளுக்கெல்லாம் ராகுல் செவிசாய்ப்பாரா என்பது பெரிய கேள்வி என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கும் என்பதே அதன் இயல்புகளில் ஒன்று என்பதையும் நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

விஜய்
கார் கொடுக்காமல் மறுத்த மாவட்ட காவல்துறை..? நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி!

தவெகவுடன் காங்கிரஸ் கை கோக்கிறதோ இல்லையோ, திமுகவுடனான தன்னுடைய பேரத்தை உயர்த்திக்கொள்ள நிச்சயம் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த தேர்தலில் தவெக எப்படியான கூட்டணியை அமைக்கும் என்பது இரண்டாவது விஷயம்; எப்படியும் எடுத்த எடுப்பிலேயே திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் தவெக தன்னுடைய விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டது; அதுவே அசத்தலான ஆரம்பம்தானே என்று கண்ணடிக்கிறார்கள் தவெகவினர்.

முயற்சிகளும் பேச்சுகளும் எங்கே போய் முடிகின்றன என்பதை வரவிருக்கும் நாட்கள் காட்டும்!

விஜய்
இந்தியா - அமெரிக்கா: வர்த்தக ஒப்பந்தத்தில் நிர்பந்திக்கும் அமெரிக்கா.. யார் விட்டுக்கொடுப்பார்கள்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com