“திருத்தம் செய்வது குற்றம்; கீழடி ஆய்வறிக்கையை முதலில் படியுங்கள்..” - அமர்நாத் ராமகிருஷ்ணன்
கீழடி ஆய்வறிக்கை என்பது ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல எனவும், அகழாய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்றும், முன்னாள் திட்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அறிக்கையில் திருத்தம் செய்வது குற்றமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கீழடி அகழாய்வு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதோ என சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார். பன்முக கலாசாரம் கொண்ட நாடு இந்தியா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிந்து சமவெளி நாகரீகத்தையும், வேத கால நாகரீகத்தையும் பேசும் நம் நாட்டின் பிற பகுதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார். தமிழகத்தின் சங்க காலம் என்று ஒன்று உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சங்ககாலம் எது என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலையில், அதுகுறித்து முறையான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கீழடியில் இனி அகழாய்வுக்கான வேலையில்லை என தெரிவித்த ஸ்ரீராமன் குழு குறித்தும் அமர்நாத் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார் . கீழடியின் பின்னணி பற்றி எதுவுமே தெரியாத ஒருவர், எவ்வாறு இத்தகைய கருத்தை கூற முடியும் என அமர்நாத் கேள்யெழுப்பியுள்ளார். அந்த இடத்தை நன்கு அறிந்ததால் தான் கொந்தகையில் உள்ள புதைவிடம் குறித்து ஆய்வு நடத்துமாறு மத்திய அரசிடம் தாம் கெஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார். வசிப்பிடத்துக்கும், இடுகாட்டுக்கும் உள்ள வித்தியாசம் இதன்மூலம் தெரியவரும் என்று அமர்நாத் தெரிவித்துள்ளார்.
ஆய்வறிக்கையை திருத்தம் செய்வது குற்றமாகும் என்றும் அமர்நாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆய்வறிக்கை அறிவியல்ரீதியாக இல்லை எனக் கூறியுள்ள மத்தியமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத், முதலில் அதனை படித்துவிட்டு கருத்துச் சொல்லட்டும் என்றும் அமர்நாத் ராமகிருணஷ்ணன் பதிலளித்துள்ளார். கீழடியை ஒட்டி வைகையின் இடது மற்றும் வலது கரைகளில், 293 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அமர்நாத் சட்டிக்காட்டியுளளார். கீழடியில் வாழ்ந்தவர்கள், மறைந்தவுடன் கொந்தகையில் புதைக்கப்பட்டனர் என்பது தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழர் வாழ்வு எங்கு தொடங்கியது என்பதை தெரிய கீழடி அகழாய்வுப் பணிகள் மிக அவசியமானது என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.