நட்சத்திர தொகுதி | தங்கம் தென்னரசின் ஹாட்ரிக் வெற்றி தொடருமா..? இந்தமுறை யார் வசம் திருச்சுழி..?
திருச்சுழியின் ஒரே எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, தங்கம் தென்னரசுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திருச்சுழியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முறை என்னவாகும்?, மாற்றம் நிகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
செய்தியாளர் - பிரசன்னா
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதி உருவானதில் இருந்து அந்தத் தொகுதியின் ஒரே எம்.எல்.ஏ-வாக இருப்பவர், அமைச்சர் தங்கம் தென்னரசு. கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வி. தங்கபாண்டியனின் அரசியல் வாரிசாக பயணத்தைத் தொடங்கிய தங்கம் தென்னரசு, தந்தையின் மறைவுக்குப் பின் 1997இல் முதன்முறையாக அருப்புக்கோட்டையில் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றார்.
அந்த தொகுதியில் 2 முறை வெற்றி, ஒரு முறை தோல்வியை கண்டுள்ளார். பின்னர், 2011இல் உருவான திருச்சுழி தொகுதிக்கு தங்கம் தென்னரசு மாறினார். அந்த தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 2016 தேர்தலில் 26 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், 2021 தேர்தலில் 60 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
முக்குலத்தோர், நாயக்கர், ரெட்டியார், இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தினர் சரிசமமாக வசிக்கும் தொகுதி இது. வறட்சி மிகுந்த கரிசல் காட்டில் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் தொகுதி மக்கள். மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 293 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தின் நிதியமைச்சர் எனும் சுமைக்கு நடுவே, தனது தொகுதி முன்னேற்றத்திற்கும் பணி செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு.
காரியாபட்டியில் புதிய நீதிமன்றம், அரசு கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள், வைகை கூட்டுக் குடிநீர் திட்டம், கம்பிக்குடி கால்வாய் பாசனத் திட்டம் போன்றவற்றைத் தொகுதிக்கு கொண்டுவந்துள்ளார். ஆனாலும், அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் போக்குவரத்து சவால்கள் இன்னும் இவருக்கு முன் நிற்கும் பணிகளாகவே உள்ளன. ஹாட்ரிக் வெற்றியை தந்த திருச்சுழியில், 4ஆவது முறையாக தங்கம் தென்னரசு களமிறங்க உள்ளார்.
அவரை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. நாதக சார்பில் கார்த்திக் ராஜாராம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முறை தவெகவும் களத்தில் இருப்பதால் விறுவிறுப்பு கூடியுள்ளது.

