நட்சத்திர தொகுதி | திமுகவின் கோட்டை பெரம்பூர்.. வரலாற்றை மாற்றுவாரா விஜய்.?
தலைநகர் சென்னையில் இருக்கும் பழமையான தொகுதிகளில் ஒன்று பெரம்பூர். 1952இல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி என்ற பெருமைக்குரியது. இப்போது இது கவனம் ஈர்க்கும் தொகுதியாகியிருப்பதற்குக் காரணம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் வரலாறை இங்கிருந்து தொடங்கப்போவதாக வெளியாகிவரும் தகவல்கள்தான். வரும் 28ஆம் தேதி பெரம்பூரிலிருந்து விஜய் பரப்புரையை தொடங்கவிருப்பது அந்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தென் சென்னையில் வசிக்கும் விஜய், வடசென்னையில் இருக்கும் பெரம்பூரைத் தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம்? இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 995 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 726 பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதல்முறை மற்றும் 35 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் என்பது விஜய்கு ஆதரவான அம்சம். விஜய்யின் ஆரம்பகால ரசிகர் மன்றங்கள் வேரூன்றிய இடமும் பெரம்பூரில் 45,000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பதாகவும், பூத் கமிட்டிகளும் வலுவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள் விஜய் ஆதரவாளர்கள்.
மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் போன்ற பகுதிகள் அடங்கிய இந்தத் தொகுதியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் அதிகம். குறிப்பாக பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இங்கு அதிகம். திமுகவின் கோட்டையாக உள்ள பெரம்பூர் தொகுதி, திராவிட இயக்க முன்னோடி சத்தியவாணி முத்து, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்திரராஜன், அதிமுகவின் பி. வெற்றிவேல், திமுகவின் ஆர்.டி.சேகர் போன்றோர் வென்ற தொகுதி. இதுவரை திமுக 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.
இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக முதல்முறையாக பெரம்பூரில் களம் காண்கிறது. அக்கட்சியின் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித்தமிழன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு அருகிலேயே, பெரம்பூர் தொகுதி இருப்பதால், திமுக இத்தொகுதியைத் தனது கூட்டணிக் கட்சியான சிபிஎம்-க்கு ஒதுக்குமா அல்லது விஜய் போட்டியிடும் பட்சத்தில், அவரை எதிர்த்து நேரடியாக களமாடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

