தென்காசி தொகுதி
தென்காசி தொகுதிweb

நட்சத்திர தொகுதி| தென்காசியில் வென்றால் கோட்டையில் கொடி.. 1977 சென்டிமென்ட் தொடருமா..?

2019இல் தனி மாவட்டமாக உருவான தென்காசி, இன்று தமிழக அரசியலின் மிக முக்கியமான களமாக மாறியுள்ளது. 5 தொகுதிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
Published on
Summary

தென்காசி மாவட்டத்தில், 1977 முதல் வெற்றி பெற்ற கூட்டணியே மாநில ஆட்சியை அமைக்கும் என்ற சென்டிமென்ட் நிலவுகிறது. இங்கு சிறுபான்மையினரின் வாக்குகள் வெற்றியாளரை தீர்மானிக்கின்றன. தனித் தொகுதிகளில் தனித்த வெற்றியை ஈட்டிய அதிமுக இந்த முறை வெல்லுமா? அதிமுகவின் 9 முறை வெற்றியை முறியடித்த திமுகவின் வியூகம்

12 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தென்காசி மாவட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தனித்துவமான வரலாறும், வியப்பூட்டும் தேர்தல் முடிவுகளும் உள்ளன.

தென்காசி தொகுதி: மாவட்டத்தின் மையப்பகுதியான தென்காசி தொகுதியில் மொத்தம் இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து நானூற்று அறுபத்தைந்து வாக்காளர்கள் உள்ளனர். 1977 முதல் இங்கு வெற்றிபெறும் கூட்டணியே மாநில அளவில் ஆட்சி அமைக்கும் என்ற அபூர்வ சென்டிமென்ட் நிலவுகிறது.

tenkasi
tenkasi X

1991 வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த இங்கு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாயிரத்து இருபத்து ஒன்றில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். பழனி நாடார் வெறும் முன்னூற்று எழுபத்து மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றார். நாடார் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தொகுதியில், சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

கடையநல்லூர் தொகுதி: அடுத்ததாக இரண்டு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து நானூற்று நாற்பத்து மூன்று வாக்காளர்களைக் கொண்டது கடையநல்லூர் தொகுதி. இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் இத்தொகுதி, அதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே எப்போதும் கடும் போட்டி நிலவும் இடமாகும். இரண்டாயிரத்து பதினொன்றில் இங்கு வென்று அமைச்சரான அதிமுகவின் செந்தூர் பாண்டியனின் மறைவுக்குப் பின், இரண்டாயிரத்து இருபத்து ஒன்றில் அவரது மகன் சி. கிருஷ்ணமுரளி களம் கண்டு வெற்றி பெற்றார். இதுவரை இங்கு ஆறு முறை இஸ்லாமிய வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

tenkasi
tenkasi X

ஆலங்குளம் தொகுதி: ஆலங்குளம் தொகுதியில் இரண்டு லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து நூற்று அறுபத்து நான்கு வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி 'ஆலடி அருணா' குடும்பத்தின் செல்வாக்கு மிக்கப் பகுதியாகும். ஆலடி அருணா மூன்று முறையும், அவரது மகள் பூங்கோதை ஆலடி அருணா இரண்டு முறையும் இங்கு வென்றுள்ளனர். இருப்பினும், இரண்டாயிரத்து இருபத்து ஒன்றில் அதிமுகவின் பி.எச். மனோஜ் பாண்டியன் இங்கு வெற்றி பெற்றார். நாடார் மற்றும் தேவர் சமூகத்தினர் சம பலத்தில் உள்ள இத்தொகுதியில், கடந்த முறை ஹரி நாடார் பிரித்த முப்பத்தேழாயிரம் வாக்குகள் முக்கியக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதித்ததால் ஒரு பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகள்: தனித் தொகுதிகளான சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகியவற்றில் தலித் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். சங்கரன்கோவிலில் அதிமுக ஒன்பது முறை வென்று ஆதிக்கம் செலுத்திய நிலையில், 2021 இல் திமுகவின் இ. ராஜா அந்த கோட்டையைத் தகர்த்தார். அதேபோல், வாசுதேவநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் த.மா.கா-வை சேர்ந்த எஸ். ஈஸ்வரன் தொடர்ந்து ஐந்து முறை வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது இங்கு மதிமுகவின் டாக்டர் சதன் திருமலைக்குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அதிமுகவின் வரலாற்றுப் பலத்திற்கும், திமுகவின் எழுச்சிக்கும் இடையே தென்காசி மாவட்டம் தேர்தல் போரின் முக்கிய களமாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com