
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்.2 அன்று ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்” என்ற கருத்தில் பேசியிருந்தார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதிக்கு ஆதரவாகவே கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அமைச்சர் உதயநிதி கொசுவத்தி சுருள் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை டேக் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீ விளையாடு நண்பா என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற புத்தகத்தில் 58 ஆவது பக்கத்தில் சனாதனம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாடும் சமயங்களும் என அமைந்த பாடத்தில் இந்து என்னும் சொல்லின் பொருள் என கொடுக்கப்பட்ட பத்தியில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “இந்து அல்லது 'ஹிந்து' என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம். ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்‘ என்றால் 'அழிவில்லாத நிலையான அறம்' எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
59 ஆவது பக்கத்தில் இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், “இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய வாக்கியங்கள் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகி இருப்பினும் கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசும் தமிழக அமைச்சர்களும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகையில் அரசின் பாடத்திட்டத்தில் சனாதன தர்மம் என்பது அழிவில்லாத நிலையான அறம் என குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.