\
TAMILNADU CM ACT CONTROVERSY
விஜய்ANI

சர்ச்சையாகும் முதல்வரின் சைகை.. ஸ்டாலின் மீதான விமர்சனத்துக்கு குரல் கொடுக்கும் சண்முகம்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் செய்த சைகை இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது
Published on

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் செய்த சைகை இணையத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக இந்நாள் முதலமைச்சர் செய்த சைகைக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அப்படி என்ன சைகை செய்தார் முதலமைச்சர்?... விரிவாக பார்க்கலாம்...

CPI - CPIM
CPI - CPIMANI

காவல் துறையின் மானியக் கோரிக்கை மீதான தனது உரையை நிறைவு செய்த முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். அப்போது, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை கைகாட்டி, ‘நம்ம நண்பர்கள் எதை பேசினாலும், நாங்க மிசாவை பார்த்தவர்கள் என எல்லாவற்றுக்கும் மிசாவைக் கொண்டு வந்து விட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை என பேசினார். தொடர்ந்து தனது தலையை ஆட்டி, தாடையில் கை வைத்து சைகை செய்தவாறு பேசிய முதல்வர், ஐயா பெரியவர்களே!, எல்லாருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு நன்றாக தெரியும்’ என பேசியிருந்தார்.

நாட்டில் நெருக்கடி காலகட்டத்தின் போது உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்ற விவாதங்கள் திமுக - அதிமுக இடையே அவ்வப்போது வெடிக்கும். அந்த வகையில் இந்த முறை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியாக மாறியிருக்கும் தவெக - திமுக இடையே மீண்டும் மிசா கைதைப் பற்றிய போர் மூண்டிருக்கிறது. இதற்கு அடித்தளம் போடுவதைப் போல, பேரவையில் முதலமைச்சர் விஜயே, மிசாவைப் பற்றி விமர்சித்து பேசியதும், அதுகுறித்து சைகை செய்ததும் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

TAMILNADU CM ACT CONTROVERSY
சட்டப்பேரவையில் அமளி.. திமுகவினரை வெளியேற்றிய அவைக்காவலர்கள்.. நடந்தது என்ன?

இந்தச்சூழலில் தான், தவெகவுடன் நிற்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் இந்த சைகைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‘அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயல்.

விஜய்
விஜய் PTI

சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயல். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது’ என தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் சண்முகம்.

முதல்வரின் சட்டமன்ற உரை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

TAMILNADU CM ACT CONTROVERSY
தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு.. இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? CM விஜயின் அடுத்த Move என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com