“எழுத்து அதன் வேலையை காலங்காலமாக செய்யும்” - எழுத்தாளர் இராசேந்திர சோழன் அஞ்சலிக் குறிப்பு

"நாம் எழுதுவதை எழுதிப் போட்டுவிடுவோம். அது அதன் வேலையை காலங்காலமாகச் செய்துகொண்டே இருக்கும்" - எழுத்தாளர் ராசேந்திர சோழன்
எழுத்தாளர் இராசேந்திர சோழன்
எழுத்தாளர் இராசேந்திர சோழன்pt web

அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திர சோழன் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதை, ஆய்வுக்கட்டுரைகள் என பல தளங்களில் இயங்கியவர். அரசியல் களப்போராட்டங்கள் மூலம் தனது தனிப்பட்ட வாழ்வையும் பொதுவாழ்வாக அமைத்துக்கொண்டவர், மரணமடைந்துள்ளார் எனும் செய்தி தமிழ் இலக்கிய உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எழுத்தாளர் இராசேந்திர சோழன்
எழுத்தாளர் இராசேந்திர சோழன்

உடல்தானம்...

கடந்த ஒருவருடமாகவே பார்கின்ஸன் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ஆறுமாதத்திற்கு முன்பே மறதி போன்ற விஷயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது விருப்பப்படி, நேற்று கண் தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று உடல் தானம் செய்ய இருக்கிறார்கள். இன்று பிற்பகல் அரசு மருத்துவமனையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலமானார் எழுத்தாளர் இராசேந்திர சோழன்
காலமானார் எழுத்தாளர் இராசேந்திர சோழன்

யார் இந்த இராசேந்திர சோழன்?

எழுத்தாளர் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் பிறந்தவர். தாயும் தந்தையும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால், 1961 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்ததும், அவரும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், முதலில் அதற்கு மறுத்து சென்னைக்கு வந்தவர் நான்காண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். ஆசிரியராகி 20 ஆண்டுகாலம் பணியில் இருந்து பின்விருப்ப ஓய்வு பெற்றார். அதிலும் தமிழ்தேசியக் கட்சியின் தேவைக்காகவே ஆசிரியர் பணியில் இருந்து 1991 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார் என அவருடன் பல ஆண்டுகாலம் பயணித்த மண்மொழி மாயவன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்காலத்திலேயே அவருக்கு வாசிப்பு அறிமுகமாகியுள்ளது. ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்த பின் நூலக வாசம் தொடங்கியுள்ளது. ஓய்வு கிடக்கும் நேரங்களில் எல்லாம் நூலகத்தில் தனது நேரத்தை கழித்துள்ளார்.

எழுத்தாளர் இராசேந்திர சோழன் இறுதி நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன்
எழுத்தாளர் இராசேந்திர சோழன் இறுதி நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன்

மண்மொழி இதழ்...

செம்மலர், தீக்கதிர், கசடதபற, அஃக், கணையாளி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். சென்னையில் தோழர்களுடன் சேர்ந்து பிரச்சனை, உதயம் போன்ற இதழ்களையும் நடத்தியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களுள் மிக முக்கியமான ஒருவர் இராசேந்திர சோழன். இடதுசாரி இயக்கங்களில் இயங்கிவந்த அவர், ஒருகட்டத்தில் தனது தோழர்களுடன் இணைந்து தமிழ்தேசிய மார்க்ஸிய கட்சி எனும் கட்சியைத் தொடங்கினார். இதன் நோக்கம் மற்றும் கொள்கைகளைப் பற்றி விளக்குவதற்காக மண்மொழி என்ற இதழையும் அவர்கள் தொடங்கி இருந்தனர்.

மார்க்சிய அரசியல்...

இதுதொடர்பாக மண்மொழி மாயவன் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில், “தோழர் சொல்வார், ‘நாம் எழுதுவதை எழுதுவதை எழுதிப் போட்டுவிடுவோம். அது அதன் வேலையை காலங்காலமாகச் செய்துகொண்டே இருக்கும்” என்று பகிர்ந்திருக்கிறார். ஆம், அவரது எழுத்து தனது வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறது.

இராசேந்திரசோழன் எழுதிய 82 சிறுகதைகளை தொகுத்து இருபாகங்களாக தமிழினி பதிப்பகம் ‘இராசேந்திரசோழன் சிறுகதைகள்’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. காவலர் இல்லம், 21 ஆவது அம்சம், சீட்டாட்டக் கலைஞன் என பல புதினங்களையும், தெனாலிராமன் நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடகங்களையும், மார்க்சிய அரசியல் நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

தமிழினி ஆசிரியர் கோகுல் பிரசாத் இராசேந்திர சோழன் அஞ்சலிக்குறிப்பாக எழுதியவை முக்கியமாக மேற்கோள்காட்டப்பட வேண்டியவை. அது - “அவர் (இராசேந்திர சோழன்) எதையும் ஒழுக்கக்கேடான விஷயமாகக் கருதுவது இல்லையாதலால் கற்பொழுக்கம் பற்றின விசாரணையை மேற்கொள்வதுமில்லை. அவரது படைப்புலகின் ஒட்டுமொத்தக் கருத்தாக ஒன்றைச் சொல்லவேண்டுமெனில், மனிதருக்கு அனைத்தையும் பயன்படுத்தும் உரிமை இருக்கிறது, ஆனால் உடைமையுணர்வு கூடாது என்பதேயாகும்

எழுத்தாளர் இராசேந்திர சோழன்
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ - பெரும்கனவு லட்சியத்தை உழைப்பால் சாத்தியமாக்கிய முதல்வர்

எழுபதுகளில் எழுதத் தொடங்கி கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கதைகளைப் படைத்தவர். இன்றைக்கும் அவரது கதைகள் புதிதாக இருக்கக் காரணம், அவர் மிகவும் நவீன மனிதர் என்பதால்தான். அவர் படைத்த ஆண் பெண் உறவுச் சிக்கல்களை இன்னமும் நாம் சந்திக்கிறோம். அவை மேலும் புதிர் நிரம்பியவையாக மாறியிருக்கின்றன. அதனாலேயே இராசேந்திர சோழன் படைத்திருக்கும் கலையுலகம் அடர்த்தியானதாகவும் பொருட்செறிவு கொண்டதாகவும் நீடிக்கிறது” என தெரிவிக்கிறார்.

எழுத்தாளர் இராசேந்திர சோழன்
எழுத்தாளர் இராசேந்திர சோழன்

அவரது எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தின் அளவிற்கு கூட சமூகம் அவரைக் கொண்டாடவில்லை என்பதே அவரது அன்பர்களின் வருத்தமாக உள்ளது. அரசு அவருக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என அவரது வாசகர்களும், அவர்களது நலன்விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com