‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ - பெரும்கனவு லட்சியத்தை உழைப்பால் சாத்தியமாக்கிய முதல்வர்

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’ பெரும் அரசியல் தலைவரின் மகனாக இருந்தாலும் கூட மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்pt web

‘வாரிசு அரசியல் செய்கிறார், ஸ்டாலின் கடைசிவரை துணை முதல்வர்தான், அவரது ஜாதகத்திலேயே முதல்வராகும் வாய்ப்பு இல்லையாம்’ என்றெல்லாம் தொடர் விமர்சனங்கள் அவர்மீது இருந்தன. அவை எல்லாமே 2021 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..” என தமிழகம் அதிர முதல்வராக பதவியேற்றார் ஸ்டாலின். அத்தகையவரின் 71-வது பிறந்தநாள் இன்று.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று

எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சிறு பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். அந்தப் பதிவின் சுருக்க வடிவம், “திமுக தொடங்கப்பட்ட காலத்தில் தலைமைப் பொறுப்பில் பட்டதாரிகள் அதிகமிருந்தனர். அண்ணாவை டபுள் எம்.ஏ. என்பார்கள், நெடுஞ்செழியன் எம்.ஏ, அன்பழகன் எம்.ஏ.... இப்படி ஒருபக்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டாளம் என்றால் இன்னொரு பக்கம் பச்சையப்பன் கல்லுரிப் பட்டாளம்.

இதற்கு இடையில் பள்ளிப்படிப்பைக் கூட ஒழுங்காக முடிக்காத ஒருவர், தமிழை மட்டுமே கொண்டு உழைக்கிறார். யார் என்ன சொல்வார்கள் என யோசிக்கவில்லை. அந்தப் பட்டதாரி கூட்டத்திற்குச் சவால் விடும் அளவுக்கு உழைக்கிறார். தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல், கொஞ்சம் கூட தாழ்வு மனம் கொள்ளாமல் பெரும் தலைமைக்கு ஈடாக எழுந்து நிற்கிறார்.

அரசின் கொடிய கரங்கள் ஒரு பக்கம். கட்சிக்கு எதிரிகள் ஒரு பக்கம். கலங்காமல் முதல்வர் பதவிக்கு வருகிறார். ஒரு கனவு கொண்டவன் தான் எழுத்தாளன். தலைவன். அது பதவியால் வருவது அல்ல. மனதால். மனதால். அந்த மனம் கொண்டுதான் பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி” என கலைஞர் குறித்து தெரிவித்துள்ளார்.

இதை தற்போதைய முதல்வர் மு.ஸ்.ஸ்டாலினுக்கும் பொருத்திப் பார்க்கலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இவை. “அண்ணா போல், கலைஞர் போல் எழுதவோ பேசவோ தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டும்தான்”. ஒரு கனவு, ஒரு லட்சியம். தொடர் உழைப்பு.. இவைதான் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாக ஆக்கியது.

திமுகவின் தலைவராக ஸ்டாலினின் வெற்றிகளுக்கு இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். அகில இந்திய அளவில், மாநிலக் கட்சிகளில், பெரும் தலைவர்கள் யாரேனும் மறைந்தால் கட்சி இரண்டாக பிளவுபடுவதை கண்டிருப்போம். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக கட்சி பிளவுபட்டது ஒரு எடுத்துக்காட்டு. தேசிய அளவில் பல்வேறு உதாரணங்கள் இதற்கு உள்ளன. ஆனால், திமுகவில் அப்படி ஏதொன்றும் நடக்காதது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அவர் பொறுப்பேற்ற போது அவரைவிட கட்சியில் சீனியர்கள் அதிகம்பேர் இருந்தனர். எல்லோரையும் அரவணைத்து கட்சியை பெரும் சலசலப்புகள் இன்றி கொண்டு சென்றது முக்கியமான ஒன்று.

இரண்டாவது மாநில அளவில் கூட்டணியிலும் பெரும் உரசல்கள் இன்றி ஆட்சியை நடத்தி வருவது, தேசிய அளவில் கூட்டணியின் அவசியத்தை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்க அம்சம். I.N.D.I.A கூட்டணியில் பல கட்சிகள் பிராந்திய கட்சிகள். மேற்குவங்கம், பஞ்சாப் என பல மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் முரண்பட்டு மாநில கட்சிகள் இருக்கையில், எந்த குழப்பமும் இன்றி கூட்டாட்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், அதை செயல்படுத்தியும் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

“கலைஞர் அண்ணா போன்றோரது பாரட்டுக்களின் மூலமாகத்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் உழைப்பேன். என் உயிர் இருக்கும்வரை உழைப்பேன். இது உறுதி”
முதல்வர் ஸ்டாலின்

> கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியினருக்கு 1953-ல் பிறந்தார்.

> சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக தந்தை கருணாநிதியால் சூட்டப்பட்ட பெயர்தான் 'ஸ்டாலின்'.

> 14 வயதிலேயே அரசியல் ஆர்வம் தென்படத் தொடங்கியது. சென்னை - கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார்.

> சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றார்.

> மேடை நாடகங்கள், சில திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடரிலும் நடிகராக வலம் வந்தவர்.

> 1968-ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக பரப்புரையில் ஈடுபட்டார்.

> 1973-ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார்.

> 1976-ல் அவரச நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார். அதன்பின் திமுகவினர், மக்கள் மத்தியில் அறிமுகமும் மதிப்பும் கூடியது.

> திமுகவில் தொடங்கப்பட்ட இளைஞரணியில் ஓர் அமைப்பாளராக 1982-ல் நியமிக்கப்பட்டார். பின்னர், அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆனார்.

> 1984-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாக களம்கண்டார். ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் 1989, 1996, 2001, 2006-ல் அதே தொகுதியில் வெற்றிகண்டார். இடையே 1991-ல் மட்டும் தோல்வி கண்டார்.

> 1996, 2001-ல் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மேம்பாலங்களை கட்டி, நகரின் உள்கட்டமைப்பை பலப்படுத்தினார்.

> 2003-ல் திமுக துணைப் பொதுச் செயலாளரார் ஆனார்.

> 2008-ல் கட்சியின் பொருளாளராக தேர்வானார்.

> 2009-ல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதன்மூலம் 'தமிழகத்தின் முதல் துணை முதல்வர்' எனும் சிறப்பு பெற்றார்.

> 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

> 2017-ல் திமுக செயல்தலைவர் ஆனார்.

> தலைவரும் தந்தையுமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, 2018-ல் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார்.

> இவர் தலைமையில் 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 39-ல் திமுக வெற்றிபெற்றது.

> 2019-ல் இருந்து திமுக தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

> இவர் தலைமையில், நடந்து முடிந்த 2021 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

> மே 7, 2021-ல் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த சில அற்புத திட்டங்கள்..

மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com