பற்றிக்கொண்ட பராசக்’தீ’| 2 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா..? புதிய மைல்கல் படைக்கவிருக்கும் SK!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படம், 1959ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்றதற்காக பாராட்டப்படும் நிலையில், 2 நாட்களில் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது..
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் படம் வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது..
2 நாட்களில் வசூலை அள்ளிய பராசக்தி..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பராசக்தி படத்திற்கு போட்டியாக, நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக பார்க்கப்பட்ட ஜனநாயகன் படமும் வெளியாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் சென்சார் சான்று பிரச்னை காரணமாக விஜயின் ஜனநாயகன் வெளியாகாத நிலையில், பொங்கல் ரேஸில் தனிப்படமாக வெளியான பராசக்தி நல்ல வசூலை குவித்து வருகிறது.
முதல் நாள் முடிவில் பராசக்தி படம் 27 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில், தற்போது இரண்டு நாட்களில் 51+ கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் அமரன் படம் மூலம் இளம் வயதில் 300 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த முதல் தமிழ்நடிகராக சாதனை படைத்த சிவகார்த்திகேயன், அமரன், டான், டாக்டர் படங்களை தொடர்ந்து பராசக்தி படத்தின் மூலமும் 100 கோடி வசூல் கொடுத்த நடிகராக சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் அதிக 100 கோடி படங்கள் கொடுத்த தமிழ்நடிகர்கள் வரிசையில் விஜய், ரஜினி, அஜித், சூர்யாவை தொடர்ந்து கமலுடன் சிவகார்த்திகேயன் இணையவிருக்கிறார்.

