“தமிழ்நாடு தலைவணங்காது” - உலக மக்கள் தொகை தினத்தில் மத்திய அரசுக்கு முதலமைச்சரின் நினைவூட்டல்!
உலக மக்கள்தொகை தினம்
மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான நாள். உலகளாவிய அளவில் மக்கள்தொகை அதிகரிப்பின் தாக்கங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக, உலக மக்கள்தொகை அதிகரிப்பின் விளைவுகளைப் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பெண்களின் சுகாதார உரிமைகள், குடும்ப திட்டமிடல், பாலியல் கல்வி ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வறுமை, கல்வி, பாலின சமத்துவம் போன்ற உலக பிரச்சனைகள் மக்கள்தொகையுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துதல் போன்றவை உலக மக்கள் தொகை தினத்தின் முதன்மையான நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, Empowering Youth to Build the Families They Want எனும் கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசுக்கு ஓர் நினைவூட்டல்
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். “உலக மக்கள்தொகை தினத்தில் மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்” என தனது பதிவைத் தொடங்கியிருக்கும் அவர், 4 விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.
குறிப்பாக,
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது
பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது
அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது
நிலையான வளர்ச்சியில் முன்னணி வீரராக திகழ்கிறது
எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், தமிழ்நாட்டுக்கு என்ன கிடைக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கும் முதலமைச்சர், “இடங்கள் குறைகின்றன. நிதி ஒதுக்கீடு குறைகிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் மெதுவாக ஒதுக்கப்படுகிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு தலைவணங்காது
தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது என்றும் எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்லாமல், டெல்லியுடன் நிற்கிறார்கள் என்றும் விமர்சித்திருக்கும் முதலமைச்சர், “அவர்கள் நியாயமற்ற தொகுதி மறுவரையரையை ஆதரிக்கிறார்கள், அது நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ்நாடு தலைவணங்காது எனத் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் அதைத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்றும் this is Orani vs Delhi Ani என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.