CBRN போட்டியில் முதலிடம் : தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை சாதனை!!
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களின் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் (SDRF) பங்கேற்ற, தென்மண்டல அளவிலான CHEMICAL BIOLOGICAL RADIOLOGICAL NUCLEAR (CBRN) (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) போட்டி 12.10.2026 முதல் 15.10.2026 வரை நடைபெற்றது. இந்தப்போட்டியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.
குறிப்பாக, இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில், துணை தளவாய் எஸ். மணிமாறன் தலைமையில், சார்பு ஆய்வாளர் கணபதி குழுத் தலைவராகவும், பிரபாகரன் பாதுகாப்பு அலுவலராகவும் உள்ளடக்கிய 20 காவலர்கள் அடங்கிய CBRN குழுவினர் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 2026 நவம்பர் முதல் வாரத்தில் காஜியாபாத், டெல்லி பகுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான CBRN போட்டியிலும் தமிழ்நாடு அணி பங்கேற்க உள்ளது. கடந்த ஆண்டும் நடைபெற்ற மண்டல மற்றும் தேசிய அளவிலான CBRN போட்டிகள் இரண்டிலும் தமிழ்நாடு அணி முதலிடம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) ஆபத்துகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்பது, மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது, அவசரநிலைகளைச் சமாளிப்பதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு மாநிலங்களின் பேரிடர் மீட்புப் படைகளின் தயார்நிலை, பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் மறுமொழித் திறன்களை மதிப்பிடுவதாகும்.

