பிரதமரை முடிவு செய்வது யார்? ஆதவ் பேச்சால் புதிய விவாதம்!
தமிழக அரசியல் சூழலில், 2029 தேர்தலில் யார் பிரதமர் என்பதை மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தீர்மானிக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இதனால், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்கவில்லையா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. எனினும் அந்த கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெக ஆட்சியமைக்க முதல் ஆளாக சென்று ஆதரவு கொடுத்தது.
தொடர்ந்து பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தவெக ஆட்சியமைத்து, விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவையில் இரு இடங்கள் வழங்கப்பட்டன. இந்த சூழலில், விஜயை அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி காங்கிரஸ் தீவிரமாக அரசியல் களமாடி வந்த நிலையில், அது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை அக்கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரித்தனர். பிரதமர் வேட்பாளர் தொடர்பான விவாதம் சிறிது நாட்கள் அடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "2029 தேர்தலில் யார் பிரதமர் என்பதை மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிதான் உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் தவெக இணைந்துள்ளது. எனினும் பிரதமர் வேட்பாளரை தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிதான் உருவாக்கும் என்று கூறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆதவ் அர்ஜுனா பேச்சின்மூலம் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை இன்னும் தவெக ஏற்கவில்லையா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில்களில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியே திமுக அரசியல் செய்ததது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து, தவெகவோடு இணைந்தும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்பதை ஆமோதிக்கும் வகையில் தவெக இதுவரை கருத்து கூறவில்லை.

