"2 அமைச்சர்களுடன் திருப்தி அடையவில்லை" - காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் ஓபன் டாக்
தமிழ்நாடு கூட்டணி அமைச்சரவையில் கிடைத்துள்ள 2 அமைச்சர்களுடன் திருப்தி அடையவில்லை என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எம்பி கனிமொழியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஓர் அரசாங்கத்தின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறு. எந்தக் காலத்திலும் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது; நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில், அந்தத் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோரிக்கை விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் தங்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகக் கூறினார். தொகுதியைக் கேட்டு கட்சித் தலைமையை வலியுறுத்துவோம் என்றும், தொகுதிப் பங்கீடு குறித்து தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், "தமிழக கூட்டணி மந்திரி சபையில் கிடைத்துள்ள இரண்டு அமைச்சர்களுடன் நாங்கள் திருப்தி அடையவில்லை. 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ளது. காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களுடைய இலக்கு. அதற்காகக் கட்சியைப் பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பத்து வாக்கு சாவடிக்கு ஒரு தலைவர் என்ற அடிப்படையில் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எங்களுக்கும் இடையே எந்தச் சலசலப்பும் இல்லை” என்றார்.

