தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்.. வீடியோ வெளியிட்ட தமிழக அரசு!!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 15-ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ள நிலையில், தங்க கொள்முதலுக்காக டெண்டர் கோரப்பட்டு, ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், முதல்வர் விஜய் அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றதால், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தினை அறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்க முடியவில்லை. இந்தச்சூழலில் தான், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக, நாளை காலை விமானம் மதுரை செல்லும் அவர், முதலாவதாக மீனாட்சி அம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு, ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் அவர், 25 குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரத்தை அணிவிக்க உள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தான், இந்தத் திட்டம் தொடர்பான வீடியோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
