செப்டம்பர் 27 | கரூர் துயரத்தின் ஓராண்டு நினைவு!!
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருந்தனர். தவெக தொடங்கப்பட்டு அந்த சமயத்தில், 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், தவெகவிற்கு மட்டுமின்றி, தமிழகத்தின் காலக்கோட்டில் ஒரு கருப்புப் பக்கமாக மாறியிருக்கிறது கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம். இந்தச்சூழலில் தான், அந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார் விஜய். சனிக்கிழமைகாள் தோறும் மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதே அவரின் பயணத் திட்டமாக இருந்தது. அதன்படி, முதல்வாரத்தில் திருச்சி மற்றும் அரியலூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், இரண்டாவது வாரத்தில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இதற்கிடையில், விஜயைக் காண ஏராளமான தொண்டர்கள் பரப்புரை நடைபெறும் பகுதிகளிலும், சாலையின் இருபுறங்களிலும் திரண்டதால், காவல்துறை அனுமதித்திருந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விஜயின் பரப்புரைகள் காவல்துறை அனுமதியளித்த நேரத்தை விட தாமதமாக தொடங்குவதையே வழக்கமாக கொண்டிருந்து.
இந்தச்சூழலில் தான், பரப்புரையின் மூன்றாவது வாரமான செப்டம்பர் 27-ம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார் விஜய். அதேசமயம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே முதலாவதாக பரப்புரையில் ஈடுபடவிருந்த நிலையில், பிறகு மாற்றப்பட்டது தான், நாமக்கல், கரூர் பயணத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பிற்பகல் 12 மணிக்கு பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பிற்பகல் 2.30 மணிக்கே பரப்புரை நடைபெறவுள்ள இடத்திற்கு சென்றார் விஜய். இதனால், பர்ப்புரை அன்றைய தினமும் தாமதமாகவே தொடங்கியது. இந்தச்சூழலில் தான், பிற்பகல் 3 மணிக்கு கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை நடக்கவிருந்த நிலையில், இரவு 7 மணிக்கே அந்த இடத்திற்கு சென்றார் விஜய்.
இந்தச்சூழலில் தான், தமிழகத்தையே உலுக்கிய அந்தத் துயரம் கரூர் வேலுசாமிபுரம் எம்.ஜி.ஆர் சிலை முன் கரூர் பெருந்துயரம் நடந்தேறியது. 10,000 பேருக்கு மட்டுமே கலந்துகொள்வார்கள் என தவெக அனுமதி வாங்கியதாக தவெக தரப்பில் அனுமதி வாங்கப்பட்ட நிலையில், 27 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, விஜய் பரப்புரை மேற்கொண்டிருக்கும் சிறிது நேரத்திலேயே, அந்த இடத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வேகமாக தனது பரப்புரையை முடித்துக்கொண்டார் விஜய். எனினும், இந்தக் கூட்டநெரிசல்களில் சிக்கி, 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேர் உயிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தான், பெருந்துயரம் நடந்திருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் உயிரிழப்பு 39-ஐ கடந்துவிட்டது. உயிரிழந்தவர்களில் பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் அதிகம் என்பதை என்பதை கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குவிந்திருந்த உடல்களை பார்த்தபோது தெரியவந்தது. இந்தப் பேரிடர் கேள்விப் பட்டவுடன் கரூருக்கு வந்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையில், அடுத்த 2 நாட்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கரூர் துயரத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது.
இந்தசம்பவம் நடந்து சில தினங்களுக்கு பிறகு காணொளி ஒன்றை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். அதில், பதற்றமான சூழலைத் தவிர்க்கவே, தான் சென்னை திரும்பியதாகவும், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் உருக்கமான பேசியிருந்தார். இந்தச்சம்பவத்திற்கு, அப்போதைய, திமுக அரசு சார்பில் விஜய் தாமதமாக பரப்புரை இடத்திற்கு சென்றதே இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கான காரணமாக குற்றச்சாட்டியது. தவெக தரப்பில், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறியது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையில், தவெக தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. தற்போது, முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுவேலையையும் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தான், இந்தப் பெருந்துயரத்தின் ஓராண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்” என தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தை நினைவுகூரும் இந்தநேரத்தில் இதுபோன்றதொரு மற்றொரு துயரம் நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

