விஜய் வெளியிட்ட வீடியோ
விஜய் வெளியிட்ட வீடியோ எக்ஸ்

"தனி மனிதனை நம்பி வந்தவர்களின் இறப்பில் அரசியல் செய்வது அபத்தமானது" - பத்திரிகையாளர்கள் சொல்வதென்ன?

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு பற்றி மூன்று நாள் கழித்து இன்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, இந்த வீடியோ குறித்து பத்திரிகையாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Published on

கரூரில் செப்டம்பர் 27 ( சனிக்கிழமை) நடந்த தவெக பரப்புரையில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். ஆனால், தவெக தரப்பில் இருந்து நேரடியாக யாரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்காத நிலையில், தவெக தலைவர் விஜயும் எக்ஸ் பக்கத்தில் மட்டும் கவலையில் உழன்று கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல தரப்பில் இருந்தும், விஜயின் கூட்டத்திற்கு வந்துதான் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், விஜய் ஏன் இன்னும் நேரடியாக சென்று பார்க்கவில்லை எனத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்த மூன்று நாள் கழித்து தவெக தலைவர் விஜய் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது விளக்கத்தை அளித்திருக்கிறார்.

கரூர்
கரூர்புதிய தலைமுறை

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில்  விஜய் பேசியதாவது

"என்னுடைய வாழ்க்கையில் இது மாதிரியான வலிநிறைந்த சூழ்நிலையில் இருந்ததே கிடையாது. மனது முழுக்க வலி. இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்ன பார்க்க வராங்க... அதுக்கு ஒரே ஒரு காரணம்தான்... அவங்க ஏன் மேல வச்சிருக்க அன்பும் பாசமும் தான். அந்த அன்புக்கும் பாசத்துக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அதனாலதான் இந்த சுற்றுப்பயணத்தில எல்லா விஷயத்தையும் தாண்டி மக்களுடைய பாதுகாப்பை மட்டும் மனசுல வச்சிட்டுதான் அதுக்கான இடங்கள காவல்துறையில கேட்டோம். ஆனால் நடக்ககூடாதது நடந்திருச்சு... நானும் மனுஷன் தான... அந்த நேரத்தில் அத்தன பேரு பாதிக்கப்பட்டிருக்கும் போது அப்படியே விட்டுட்டு வர முடில... நான் திரும்ப போகனும்னு 20 நிமிஷம் காத்திருந்தேன்... அத காரணம் காட்டி வேற சில அசம்பாவிதங்கள் நடந்திற கூடாதுன்னு தான் நான் திரும்பி வந்துட்டேன்.

இந்த நேரத்தில சொந்தங்கள இழந்து தவிக்கிற அனைத்து குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தெரியும்.. என்ன சொன்னாலும் ஈடாகாதுன்னு எனக்கு தெரியும்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிற எல்லாரும் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்க எல்லாரையும் சீக்கிரம் வந்து சந்திக்கிறேன்.

இந்த நேரத்தில எங்களுடைய வலிகளை புரிஞ்சிகிட்டு எங்களுக்காக பேசுன அரசியல் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 மாவட்டத்திற்கு போய் இருக்கேன். எங்கேயும் இப்படி நடக்கல கரூர்ல மட்டும் ஏன் இப்டி நடக்குது... மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூரை சார்ந்த மக்கள் வந்து உண்மையெல்லாம் சொல்லும் போது கடவுளே நேர்ல வந்து சொல்ற மாதிரி இருக்கு...

விஜய் வெளியிட்ட வீடியோ
விஜய் வெளியிட்ட வீடியோpt web

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.. எனக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க போய் பேசிட்டு வந்தோம்.. நாங்க எந்த தவறும் பண்ணல.. ஆனால் எங்க கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மேல வழக்குப்பதிவு செய்திருக்கீங்க....

சிஎம் சார் உங்களுக்கு எதாவது பழி வாங்குற எண்ணம் இருந்த என்ன என்னவேணா பண்ணுங்க... அவங்க மேல கை வைக்காதீங்க,.. நான் வீட்ல இருப்பேன்.. இல்ல அலுவலகத்தில இருப்பேன்... என்ன என்ன வேணா பண்ணுங்க...

நம்முடைய அரசியல் பயணம் இன்னும் தீவிரமா தொடங்கும்... நன்றி” எனப் பேசி முடித்தார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் எனப் பலரும் தங்கள் கருத்துக்களை புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்pt web

பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "தொண்டர்களை சமாதானப்படுத்த இம்மாதிரியான வீடியோவை வெளியிட்டிருப்பதாகப் பார்க்கிறேன். என்மேல் என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுங்கள் என்பது மக்களிடம் சிம்பதி கொண்டுவர முயற்சி செய்வதுபோல் இருக்கிறது. அவர்தான் கட்சியின் தலைவர். அவருக்காகதான் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில்தான் இம்மாதிரியான அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது விஜயின் கடமை. எனவே இந்த சூழலிலும் அனுதாபம் பெறுவதற்காக இப்படி பேசுகிறார். இது சரியான ஆளுமைக்கு அழகல்ல" எனத் தெரிவித்தார்.

அபத்தம் தரும் வீடியோ

அரசியல் விமர்சகர் செந்தில்வேல் இதுதொடர்பாகப் பேசுகையில், "விஜய் வெளியிட்டது விளக்கம் தரும் வீடியோ அல்ல. அபத்தம் தரும் வீடியோ. 40 பேரின் மரணம் எவ்வளவு அதிர்ச்சியோ அதைவிட பேரதிர்ச்சி விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ. மதுரையில் ஒரு நபர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்குபேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது என்பது ஊடகங்களில் வெளிவந்த செய்தி. எனவே கரூரில் மட்டும் நடக்கவில்லை. கரூரில் நிலைமை சற்று கைமீறி சென்றுவிட்டது. குறைந்தபட்சம் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டாமா? உங்களுடைய தொண்டர்கள்தானே. நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். யார் உங்களைப் பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

100% அரசியல்

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “மூன்று நாட்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக பேசியிருக்கிறோம். இந்த காணொளியில் அவர் தரப்பு நியாயத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட முக்கியமாக முதலமைச்சரை நோக்கி அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது மொத்த சூழலையும் மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த நேரத்தில் இது தேவையற்ற விமர்சனம். மிகப்பெரிய வேதனையில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

tn cm adviced on karur stampede incidents
தவெக கரூர் பரப்புரைஎக்ஸ்

விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. தவெக தரப்பில் இருந்தே சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்கள். எதற்குமே முடிவு வராத சூழலில், என்னைப் பழி வாங்க வேண்டுமென நினைத்தீர்கள் என்றால் நான் வீட்டில்தான் இருப்பேன் என்பது தன் தரப்பு தொண்டர்களை தூண்டி விடக்கூடிய தன்மைதான். 100% விஜய் இதை அரசியல் ஆக்குகிறார். இது தவறான முன்னுதாரணம். விஜய் எனும் தனி மனிதனை நம்பி வந்த பெருங்கூட்டத்தின் இழப்பில் அரசியல் செய்வது என்பது அபத்தமானது.. நேரடியாக திமுக தலைமை மீது இந்த விமர்சனத்தை முன் வைக்கிறார்.

எல்லோரும் அமைதியாக இருப்போம்.. உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று சொல்லவருவது வரை சரிதான். ஆனால், அரசியல் நெடி அதிகமாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com