தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக வி.பி.மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 நபர்களில் 51 பேர் சிகிச்சை குணமடைந்து விடு திரும்பியிருக்கின்றனர். மீதம் உள்ள 59 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்நுவமனையில் 51 பேரும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 109, 110, 125b மற்றும் 223 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக முதல் குற்றவாளியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், இரண்டாவது குற்றவாளியாக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், மூன்றாவது குற்றவாளியாக த.வெ.க இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
அதேபோல கரூர் துயர சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும், நேரில் பார்த்தவர்களிடமும், காவல்துறையினரிடமும் தகவல்களைக் கேட்டறிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வைத்து தனிப்படை போலீசார் மதியழகனைக் கைது செய்திருக்கின்றனர்.
முன்னதாக முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், "கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் பிரச்சாரக்கூட்டத்திற்கு சுமார் 25000க்கும் மேற்பட்டோர் வந்தனர். தவெக தொண்டர்களுக்கு போதிய பாதுகாப்பை போலீசார் வழங்கியபோதும், மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தாமல் இருந்ததாகவும், இதனால் அருகிலுள்ள கடைகளில் நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகள் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார்ந்ததால் தகர கொட்டகை உடைந்து மரம் முறிந்ததால், தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது" என மதியழகன் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.