\
CM VIJAY
CM VIJAY ANI

நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் வகுத்திருக்கும் மாஸ்டர் பிளான்!

தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளது. மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published on
Summary

தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை, மத்திய நிதி ஒதுக்கீடு போன்ற சவால்கள் மத்தியில் மக்கள் எதிர்பார்ப்பு உயரும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மதிப்புமிகு மகளிர் திட்டம், இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலைவாய்ப்பில்லாத இளைஞர் உதவித்தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளது. மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை, மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, நாளை காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

UTHAYANITHI
UTHAYANITHI ANI

பல முக்கிய பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் "மதிப்புமிகு மகளிர் திட்டம்", ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் எவை இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

CM VIJAY
கருணாநிதி முதல் உதயநிதி வரை.. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது! தமிழக அரசியலின் பரபரப்பு வரலாறு!

இதனிடையே, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விவகாரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் சட்டம்-ஒழுங்கு, குடிநீர், கல்வி, வேளாண்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. அப்போது முதல்வர் விஜய் அளித்த பதிலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மேலும், எதிர்க்கட்சித் தரப்பு தங்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

CM VIJAY
CM VIJAY ANI

இந்நிலையில், நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச்செல்லப்பட்டார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உதயநிதி கைதை கண்டித்து எதிர்க்கட்சியான திமுக வலுவான எதிர்ப்பை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக கேள்வி கேட்கத் தயாராக இருப்பதால், சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

CM VIJAY
கைது செய்யப்பட்ட உதயநிதி.. பற்றி எரிந்த தமிழ்நாடு.. கவனம் ஈர்த்த நிவேதா பெத்துராஜ் பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com