\
Actress Nivetha Pethuraj x post is going viral on social media
நிவேதா பெத்துராஜ்எக்ஸ் தளம்

கைது செய்யப்பட்ட உதயநிதி.. பற்றி எரிந்த தமிழ்நாடு.. கவனம் ஈர்த்த நிவேதா பெத்துராஜ் பதிவு!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on

தஞ்சையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

Udhayanidhi Stalin
Udhayanidhi StalinPT

இந்தப் போராட்டத்தில், 8 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கிறது. கிட்டத்தட்ட பாலைவனம் போல் மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்திருந்தால், இந்த நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது என்று கூறிய அவர், விஜய் ஒரு டம்மியான முதலமைச்சர் என்றும், விமர்சித்தார். இதுமட்டுமின்றி, முதலமைச்சர் விஜயை ஆபாசமான முறையில், உதயநிதி விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Udhayanidhi Stalin
Udhayanidhi StalinPT

இதற்கு, பெரும் எதிர்ப்பு அலை வீசிய நிலையில், தவெகவின் மகளிரணி சார்பில், தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்று உதயநிதியின் வீட்டிற்கு வந்து, அவரை கைதுசெய்த போலீசார், விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி-க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருப்பதால், பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

nivetha pethuraj
nivetha pethurajX

இதற்கிடையே, உதயநிதியுடன் ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ரவி மோகனுடன் ’டிக் டிக் டிக்’, விஜய் சேதுபதியுடன் ’சங்கத்தமிழன்’ போன்ற படங்களில் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’புறங்கூறிப் பொய்த்துயிர்’ என்று தொடங்கும் திருக்குறளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

’ஒரு நபரின் முன்னிலையில் நட்பாக பேசிவிட்டு, அவர் இல்லாதபோது பழித்துப் பேசி பொய்மையாக உயிர்வாழ்வதைவிட, இறந்துவிடுவதே மேல் என்பதுதான்’ இந்த திருக்குறளுக்கான அர்த்தம். உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையை தொடர்ந்து, நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com