சென்னை ஐஐடியில் தமிழ் பயிற்சி| ”முடிந்தவரை பேச முயற்சிக்கிறேன்..” - ஆளுநர் ஆர்.என்.ரவி.!
சென்னை ஐஐடி வளாகத்தில் 300 மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் ”தமிழ் கற்கலாம்” எனும் பயிற்சி பட்டறை இன்று தொடங்கப்பட்டது. மேலும், இன்று தொடங்கும் இந்தப் பயிற்சி பயிற்சிப் பட்டறை டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இப்பயிற்சி பட்டறையின் தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். மேலும், இந்த நிகழ்வில் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களிடத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி, ”இந்தியாவை எந்த ஒரு அரசர்களும் உருவாக்கவில்லை ரிஷிகள்தான் உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் ஒற்றுமை என்பது ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்பு இருந்தது. வேறு மொழி வேறு கலாச்சாரம் என்றாலும் இந்தியாவிற்குள் அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயணித்தார்கள். செடிகளில் பூ, கனி, காய் என எப்படி ஒவ்வொன்றும் தொடர்புடையதோ அதேபோல, இந்தியாவில் உள்ள யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது. நீர், மரம் மற்றும் பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.
”ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது வெறும் வரிகள் அல்ல” அவை உண்மையானவை. ஆனால், ஆங்கிலேயர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள். வடமாநிலங்கள் குறித்தும் தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் மற்றும் அவர்களின் தியாகங்கள் குறித்தும் தென் மாநிலத்தவர்கள் குறைவாக தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்..!
தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கிய போது முதலில் எழுத்துக்களை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன். செய்தித்தாள்கள் படித்தேன். இப்போது, முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகிவிட்டது.மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும் ஆனால் சுவையாக இருக்கும். இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அதேபோல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்" எனத் தெரிவித்துள்ளார்.

