100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம்| ’ஏழைகளின் நலன்மீதான தாக்குதல்..’ சோனியா காந்தி கண்டனம்!
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுவருகிறது.
அதன்படி, கிராமப் புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ”மகத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற இத் திட்டத்தின் பெயரை ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) என மாற்ற முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டிருக்கிறது. மேலும், இத்திட்டத்தின் கொள்கைளிலும் பல மாற்றங்களை ஆளும் பாஜக அரசு செய்திருக்கிறது.
இந்தநிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கும், அதில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் திட்டக் கொள்கைகளுக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இத்திட்டத்தில் பாஜக அரசு செய்திருக்கும் மாற்றங்கள் முதன் முதலில் இந்த திட்டம் கொண்டு வந்ததன் அடிப்படை நோக்கத்தை கெடுப்பதாகவும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மசோதா குறித்து ”உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது புல்டோசர் தாக்குதல்” எனக் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், ”20 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. மேலும், இது கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு பயன் அளித்த ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக இருந்தது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, ஏழை மற்றும் மிக எளிய மக்களுக்கு இது வாழ்வாதாரமாக அமைந்தது.
இத்திட்டத்தின் மூலம், வேலை தேடி தாயகம், கிராமம், வீடு, குடும்பத்தை விட்டு வெளியே செல்லும் நிலைத் தடுக்கப்பட்டது. வேலைக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மகாத்மா காந்தியின் ‘கிராம சுயராஜ்யம்’ என்ற கனவுக்கு இந்தியாவில் ஒரு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில், மோடி அரசு கிராமப்புற வேலை இழந்தோர், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ-வை பலவீனப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், கொரோனா காலத்தில் இந்தத் திட்டம் ஏழை மக்களுக்கு உயிர்காக்கும் திட்டமாக நிரூபித்தது. இந்நிலையில், சமீபத்தில் பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ‘புல்டோசர்’ செய்து தகர்த்துள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், எந்தவித விவாதம் மற்றும் ஆலோசனைகள் இல்லாமல், எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிகாமல், திட்டத்தின் அடிப்படை தன்மையே தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளது.
இனி யாருக்கு வேலை வழங்கப்படும், எவ்வளவு வேலை, எங்கு, எந்த முறையில் என்பதையெல்லாம், நிலைமையை நேரில் அறியாத டெல்லியில் அமர்ந்திருக்கும் அரசு தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் உருவாக்கத்திலும் அதன் செயல்பாட்டிலும் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகித்தது. ஆனால், இது ஒருபோதும் ஒரு கட்சி சார்ந்த திட்டமாக இருக்கவில்லை. இது தேசிய நலன் மற்றும் பொது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்களை தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன், என் ஏழை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு வேலை உரிமையைப் பெற்றுத் தர நான் போராடினேன். இன்றும், இந்த அடக்குமுறைச் சட்டத்துக்கு எதிராகப் போராட நான் உறுதியாக உள்ளேன். என்னைப் போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

