தெலங்கானா பாஜகவில் உட்கட்சி பூசல்..? பிரதமர் மோடி எச்சரிக்கை.!
தெலங்கானாவில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க பிரதமர் மோடி முயற்சித்தாலும், பண்டி சஞ்சய் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்கு மோதலால் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில் பாஜக குறைந்த வாக்குகள் பெற்றதை தொடர்ந்து, மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானாவில், பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்நிலையில், அங்கு பாஜகவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க, பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தார் பிரதமர் மோடி. ஆனால், பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி இருவருமே, பாஜகவில் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கவே அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
தெலங்கானாவின் இரண்டாவது பெரிய கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியுடன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மென்மையான போக்கை கடைப்பிடித்து கூட்டணிக்கு முயற்சித்துள்ளார். ஆனால், மற்றொரு பாஜக அமைச்சரான பண்டி சஞ்சய் இதில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸுக்கு இணையாக 35 சதவீத ஓட்டுகளை வாங்கியது பாஜக.
ஆனால், சமீபத்தில் நடந்த ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில், வெறும் 8.8 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியான பிரதமர் மோடி, பண்டி சஞ்சயையும் கிஷன் ரெட்டியையும் கடுமையாக எச்சரித்ததோடு, அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

