நெல்லை பல்கலை. | ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது ஏன்? மாணவி விளக்கம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32- வது பட்டமளிப்பு விழாவில் ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டத்தை வாங்க மறுத்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் அம்மாணவி குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்.
இந்நிலையில் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாகப் பேசிய மாணவி, “பட்டத்தை முதலில் துணை வேந்தரிடம் கொடுத்தபோது நான் தவறுதலாகக் கொடுத்துவிட்டதாக நினைத்தனர். பின்னர், வேண்டுமென்றுதான் கொடுப்பதாகத் தெரிவித்ததுடன் அவரும் ஏற்றுக்கொண்டார். பட்டத்தைக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்கள் பட்டத்தினைக் கொடுக்காமல் ஏன் ஆளுநர் கொடுக்கிறார் என்பதுதான் என் கேள்வி.
ஆளுநர் தமிழகத்திற்கென்று எதுவும் செய்யவில்லை. அதுதான் உண்மை. அதுமட்டுமின்றி, பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் யாராவது உடனிருப்பார்கள் என நினைத்தேன். அப்படி அமைச்சர்கள் யாராவது உடனிருந்திருந்தால் நான் கண்டிப்பாக அவர்களிடம்தான் கொடுத்து வாங்கியிருப்பேன்.
என்னுடன் இருந்தவர்களும் என்னைப் பாராட்டினார்கள்..” எனத் தெரிவித்தார், செய்தியாளர் குடும்பத்தினர் யாரேனும் கட்சியில் இருக்கிறார்களா என்ற கேள்வி கேட்ட நிலையில், கணவர் திமுகவில் நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் எனத் தெரிவித்தார்.