யூடியூப் பார்த்து டயட் கண்ட்ரோல்... பரிதாபமாக உயிரிழந்த 17 வயது சிறுவன்!
குளச்சல் பர்னட்டிவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 12ஆம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு செல்ல இருந்த நிலையில், வீட்டில் திடீரென மூச்சுத்திணறி மயங்கி கீழே சரிந்துள்ளார்.
அவரை உடனடியாக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, சிறுவன் உடல் பருமனால் அவதியுற்று வந்ததும், உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து டயட் கண்ட்ரோலை கடைபிடித்து வந்ததும் தெரியவந்தது.
அதாவது, யூடியூப் பார்த்து தினமும் உணவருந்தாமல் பழச்சாறு மட்டும் அருந்தி, உடற்பயிற்சி செய்து வந்ததாகவும், தொடர்ந்து பழச்சாறு மட்டுமே அருந்தி வந்ததால் சளித்தொல்லைக்கு ஆளாகி மூச்சுவிட சிரமப்பட்டு வந்த சிறுவன், திடீரென மூச்சுத்திணறி மயங்கி சரிந்ததாகவும் கூறப்படுகிறது. உண்மையாகவே சளித்தொல்லையால் மூச்சுத்திணறி உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என காவல்துறையினர் கூறி உள்ளனர்.