தனது தாயுடன் நிகிதா
தனது தாயுடன் நிகிதாpt web

அஜித்குமார் கொலை வழக்கு: நிகிதாவிற்கு சம்மன் அனுப்பிய சிபிஐ; 3 மணிநேரமாக கிடுக்குப்பிடி விசாரணை

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 மணி நேரத்திற்கு மேலாக நிகிதாவிடம் நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்துள்ளது. விசாரணையில் நடந்தது என்ன ? கிடைத்துள்ள தகவல்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
Published on

செய்தியாளர் - மணிகண்டன்

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த கோவில் காவலாளி அஜித் குமார், அங்கு சாமி கும்பிட வந்த நிகிதா என்னும் பெண்ணின் நகை காணாமல் போன வழக்கில், தனிப்படைக் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

திருப்புவனம் அஜித் குமார்
திருப்புவனம் அஜித் குமார்

இந்த வழக்கில் நிகிதா என்னும் பெண் ஏற்கனவே ஒரு மோசடிப் பேர்வழி என்பதும், அவர்மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் கடந்த 2011-ம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்-உம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ச்சியாக அவர்மீது பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். ஆனால், அவர்மீது காவல்துறை தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அவர் பொள்ளாச்சிக்கு தப்பிச் சென்றபோது அவரை தனியார் பேக்கிரி அருகே சிலர் மடக்கிப் பிடித்து வைத்திருந்தும் காவல்துறையினர் அவரைக் கைது செய்யவில்லை என, தொடர்ச்சியாக காவல்துறையினர் நிகிதாவிற்கு சாதமாக செயல்படுவதாகக் கூறி பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

நிகிதா மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு
நிகிதா மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு நிகிதா

அதேபோல நிகிதா உண்மையில் நகைக்காகத்தான் புகார் அளித்தாரா? இல்லை அஜித்துடன் கோவிலில் ஏற்பட்ட வாக்குவாதததிற்கு பலி வாங்கும் படலமாக புகார் அளிக்கப்பட்டதா ? நிகிதா சொன்ன ஒரே காரணத்திற்காக எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படாமல் எதற்காக தனிப்படை காவலர்கள் விசாரணையில் இறக்கப்பட்டனர் ? நிகிதாவிற்கு உறுதுணையாக இருக்கும் அந்த முக்கியப்புள்ளி யார் ? என பல கேள்விகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாகவே மடப்புரம் பகுதியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஜூலை 24-ம் வழக்கின் முக்கிய நபரான புகாரளித்த நிகிதா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ நிகிதாவிற்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி விசாரணைக்கு ஆஜரான நிகிதாவிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் நிகிதா காரை யாரிடம் கொடுத்து பார்க் செய்யச் சொன்னார்? அஜித்குமார் காரை பார்க் செய்ததை நிகிதா பார்த்தாரா? நகை காணாமல் போனதை எப்போது கவணித்தார்? உடனடியாக புகார் அளித்தாரா? அல்லது புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா? புகாரைப் பெற்றது யார்? புகார் கொடுக்கும்போது காவல் நிலையத்தில் இருந்த அதொகாரிகள் யார்? உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்னென்ன நடவடிக்கை காவல்துறை தரப்பில் இருந்து எடுக்கப்பட்டது? என்பன போன்ற 50க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com