பாஜக to தவெக to திமுக| தவெக-லிருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார், தற்போது தவெக தலைவரின் கருத்துக்களை கண்டித்து திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்ததற்கு பெருமை எனக் கூறிய அவர், பெண்களுக்கான பாதுகாப்பு திமுகவால் மட்டுமே வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஆனால் சமீபத்தில் மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் ’விவாகரத்து விவகாரம்’ குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா என பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.
மேலும் தவெக நிர்வாகிகளையும் அடுத்தடுத்து விமர்சித்த அவர், சில செய்தி சேனல்களிலும் பேட்டியளித்து தவெகவிற்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்தார்.
இந்தசூழலில் தான் அவர் தவெகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைந்துக்கொண்டுள்ளார்.
திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்..
தவெகவில் அங்கமாக இருந்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் முதலமைச்சர் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவில் இணைந்தார். டைரக்டர் பாலாவின் அண்ணன் மகளான ரஞ்சனா நாச்சியார், சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் படிக்கட்டில் தொங்கிய மாணவரை அடித்த விவகாரத்தில் பேசுபொருளாக மாறினார். பின்னர் அவ்விவகாரத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட ரஞ்சனா நாச்சியார், ”திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்வதை பெருமையாக பார்க்கிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது” என்று பேசியுள்ளார்.

