நட்சத்திர தொகுதி | கொளத்தூரின் ஒரே எம்எல்ஏ மு.க. ஸ்டாலின்.. எகிறும் எதிர்பார்ப்பு.!
தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு களம் பரபரப்பாகி வருகிறது. முக்கிய தலைவர்கள் களமிறங்கும் தொகுதிகளின் கள நிலவரத்தை ஒவ்வொன்றாக பார்க்க உள்ளோம். முதல்வரின் தொகுதியான கொளத்தூர் தொகுதி குறித்து நட்சத்திர தொகுதி பகுதியில் பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலினோடு நீண்ட காலம் பிணைப்பில் இருந்த தொகுதி என்றால், அது சென்னையிலுள்ள ஆயிரம் விளக்கு தொகுதிதான். 1984, 1989, 1991, 1996, 2001, 2006 என்று 6 தேர்தல்கள் ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதி; நான்கு முறை அவருக்கு வெற்றியையும் இரண்டு முறை தோல்வியையும் தந்தது.
2011இல் கொளத்தூருக்கு மாறினார் ஸ்டாலின். வெற்றிகளைத் தந்தது கொளத்தூர். விசேஷம் என்னவென்றால், 2011இல் தான் உருவாக்கப்பட்டது கொளத்தூர் தொகுதி. அதன் வரலாற்றில் ஒரே எம்.எல்.ஏ. ஸ்டாலின்! விளிம்புநிலைச் சமூகங்கள், சிறு தொழில் புரிவோர், கூலித் தொழிலாளர்கள், சிறுபான்மையினர் மிகுந்த தொகுதி கொளத்தூர். வாக்காளர் திருத்தத்தின்போது ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டதோடு, மறுபடியும் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்ட தொகுதியும் கொளத்தூர். இன்றைக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
2011 தேர்தலில், அதிமுக சார்பில் சைதை துரைசாமியை எதிர்த்து நின்றபோது, ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 68,677. துரைசாமி பெற்ற வாக்குகள் 65,943. சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஸ்டாலின் வென்றார். ஆனால், 2016இல் எதிர்த்து நின்ற ஜே.சி.டி.பிரபாபகரைக் காட்டிலும் 37,730 வாக்குகளாக வெற்றி வித்தியாசத்தை அதிகரித்தார் ஸ்டாலின். 2021 தேர்தலில் எதிர்த்து நின்ற ஆதி ராஜாராமைக் காட்டிலும் 70,384 வாக்குகளாக வெற்றி வித்தியாசத்தை மேலும் அதிகரித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை கொளத்தூருக்கு கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். ஒரு அரசு கலைக் கல்லூரி, வண்ண மீன் அங்காடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் என நிறையவே செய்திருக்கிறார். மெட்ரோ ரயில் சேவைத் திட்டத்துக்குள்ளும் இத்தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும், தொகுதியின் தேவைகளும் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகம்.
இந்த முறை அதிமுக, நாம் தமிழர் கட்சியோடு களத்தில் தவெகவும் கால் பதித்திருப்பது கொளத்தூர் களத்தைக் கூடுதல் வெப்பத்தில் தள்ளியிருக்கிறது!

