”ஒரே நாளில் 1.26 கோடி பணம் பறிமுதல்” - தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான, வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலாகியிருக்கும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில், 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள் 2.90 கோடி, ஆண்கள் 2.78 கோடி, திருநங்கைகள் 7,656 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா, வாக்குச்சாவடி எது என்பதையும் வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். வேட்புமனு தாக்கல் மார்ச். 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்.6 ஆகும். இதற்கிடையில், மார்ச்.31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல்.3 (புனித வெள்ளி), ஏப்ரல்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்கள் அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
இந்த சூழலில், 2,106 பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள் சோதனையைத் தொடங்கியுள்ளன. வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் பணம் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை 1.26 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்:
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, இதுவரை 3.14 லட்சம் வாக்காளர்கள் இணைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் - 26 வரை விண்ணப்பிக்கலாம். அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ஏஐ தொழில்நுட்ப மூலம் வெளியிடப்படும் வீடியோவை கண்காணித்து வருகிறோம்.
அரசியல் கட்சிகள் காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை பரப்புரை மேற்கொள்ளலாம். பரப்புரைக்கு அனுமதி பெறுவதற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பரப்புரை செய்பவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பரப்புரையின் போது, 5 ஆயிரத்திற்கு மேல் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும். தமிழகத்திற்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

