ரிதன்யா மரணம்|கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரும் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சூழலில் கணவர் மற்றும் மாமனார் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், மாமியார் சித்ராதேவியும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் ரிதன்யாவின் பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து ரிதன்யாவின் மாமியாரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி..
ரிதன்யாவின் மரணத்தில் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரும் ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குணசேகரன், கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாமியார் சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு தனியாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.