திருப்பூர் | "குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை" - ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
செய்தியாளர்: ஹாலித்ராஜா
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யா. ரிதன்யாவிற்கு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் பேரனும் ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகனுமான கவின் குமாருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில், புதுப்பெண் ரிதன்யா சேவூர் ரோட்டில் தனது காரை நிறுத்தி விட்டு, காரிலேயே தென்னை மரப்பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோர் பதிவுகளில் தனது மரண்த்துக்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் சித்ரவதை செய்தது தான் என்று அனுப்பி இருந்தார். அந்த ஆடியோ பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதையடுத்து கணவர் கவின்குமார் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து கவின்தரப்பு பதில் அளிக்க கால அவகாசம் கோரியது.
இருதரப்பும் வாதங்களை முன்வைக்க நீதிபதி குணசேகரன் அறிவுறுத்தி இருந்தார். இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார். மாமியார் சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ராதேவி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என்ற நிலையில் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகன்யாவின் குடும்ப வழக்கறிஞர் சுப்பிரமணியன் கூறுகையில்... திருமணமான 78 நாட்களில் ரிதன்யா உயிரிழந்துள்ளார். வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு ஆடியோ அனுப்பி உள்ளார். கணவர் மாமனார் மாமியார் சித்ரவதை தாங்க முடியாது எனக் கூறியுள்ளார். அதன்படி கணவர் மாமனார் கைது செய்யப்பட்டனர். ரிதன்யா பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததை தொடர்ந்து சித்ரா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த நாளே ஜாமீன் மனு வழங்கப்பட்டது. இதற்கு ரிதன்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு வழங்கி உள்ளார்.
அதனை ஏற்று ஜாமீன் மனு விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை உடற்கூறாய்வு சோதனை முடிவு வழங்கப்படவில்லை. "இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கில் தேவையான நேரத்தை காவல் துறையினர் எடுத்துக் கொள்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணை முடிவு மற்றும் உடற்கூறாய்வு முடிவுகள் வரும்போது, உரிய தீர்வு கிடைக்கும். சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆடியோ அடிப்படையில் வழக்கு மாற்றி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்" என்று ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் சி.பி.சுப்ரமணியம் தெரிவித்தார்.