ஜெயலலிதாவை விடாத செங்கோட்டையன்.. நினைவு நாளில் பதிவு.. தவெகவில் சலசலப்பு!
கார்த்திகை தீபத் திருநாளுக்கு ஜெயலலிதா படத்துடன் வாழ்த்து தெரிவித்திருந்த செங்கோட்டையன், தற்போது அவருடைய நினைவு நாளுக்கும் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருப்பது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாள் விழாவையொட்டி, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, தவெகவில் இணைந்த செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு தவெகவில் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘தீமையில் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும், அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார். மேலும் அந்தப் பதிவில் தவெக கொள்கை தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய 5 தலைவர்களின் புகைப்படங்களோடு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய படங்களும் தவெக தலைவர் விஜய் மற்றும் ஆனந்த் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
செங்கோட்டையன் பதிவிட்ட இந்த பதிவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. அதாவது, தவெக நிர்வாகியின் பதிவில் எப்படி ஜெயலலிதா படம் இருக்கலாம், அப்படியென்றால் தவெக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டதா என்று பலரும் வினவி இருந்தார்கள். இது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் படத்தை செங்கோட்டையன் நீக்கியிருந்தார். ஆனால், பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதை, மீண்டும் எந்த மாற்றமும் செய்யாமல் நேற்று பதிவிட்டார். இது, தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அண்ணா, எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இதுவரை ஜெயலலிதாவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பதிவு நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, செங்கோட்டையன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ’மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இது, மீண்டும் தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெகவில் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்ததும், பின்னர் தவெக நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அவர் மரியாதை செலுத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் கொள்கைகளை தவெக ஏற்றுக் கொள்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

