sengottaiyan controversy post on Jayalalithaa image
செங்கோட்டையன்எக்ஸ் தளம்

ஜெயலலிதா படத்தை நீக்காமல்.. தீப நாள் வாழ்த்துப் பதிவை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதை நீக்கியிருந்தார்.
Published on
Summary

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதை நீக்கியிருந்தார். பின்பு, அதில் எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை தீபத் திருநாள் விழாவையொட்டி, நேற்று தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு தவெகவில் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘தீமையில் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும், அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்தப் பதிவில் தவெக கொள்கை தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய 5 தலைவர்களின் புகைப்படங்களோடு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய படங்களும் தவெக தலைவர் விஜய் மற்றும் ஆனந்த் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

செங்கோட்டையன் பதிவிட்ட இந்த பதிவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. அதாவது, தவெக நிர்வாகியின் பதிவில் எப்படி ஜெயலலிதா படம் இருக்கலாம், அப்படியென்றால் தவெக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டதா என்று பலரும் வினவி இருந்தார்கள். இது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் படத்தை செங்கோட்டையன் நீக்கியிருந்தார். ஆனால், பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதை, மீண்டும் எந்த மாற்றமும் செய்யாமல் இன்று பதிவிட்டுள்ளார். இது, தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

sengottaiyan controversy post on Jayalalithaa image
செங்கோட்டையன்எக்ஸ் தளம்

அண்ணா, எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இதுவரை ஜெயலலிதாவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பதிவு நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தவெகவில் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். அப்போது அதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், ”இங்கு ஜனநாயகம் இருக்கிறது. யார் புகைப்படம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்”எனப் பதிலளித்தார். தொடர்ந்து, தவெக நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அவர் மரியாதை செலுத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் கார்த்திகை தீபத் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அதை, நீக்கியதும் பின்பு மீண்டும் பகிர்ந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவின் கொள்கைகளை தவெக ஏற்றுக் கொள்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

sengottaiyan controversy post on Jayalalithaa image
”விஜய் முதல்வராவது உறுதி” - தவெகவின் கொள்கை குறித்தும் விளக்கமளித்த செங்கோட்டையன்!

முன்னதாக, தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பிறகு அவரது ஒவ்வொரு நகரும் கவனிக்கப்பட்டு பேசுபொருளாகிறது. அந்த வகையில் செங்கோட்டையனின் சமூக வலைதள பக்கத்தில் கூட அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களே பெரிதாக வைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் படத்துடன் வைக்கப்பட்ட கட்சி பேனரில், கட்சியின் கொள்கைத் தலைவர்கள் படங்கள் சிறியதாகவும், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் பெரியதாகவும் வைக்கப்பட்டதும் கவனம் பெற்றன. அந்த வரிசையில் தற்போது தீபநாள் வாழ்த்துச் செய்தியும் பேசுபொருளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com