”துரோகம் செய்வதில் பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம்” - செங்கோட்டையன் பேட்டி!
அதிமுகவிலிருந்து தாம் நீக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியிருந்தார் செங்கோட்டையன். அதையடுத்து, அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில் தான், செங்கோட்டையன், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் சந்திப்பு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன்னில் நிகழ்ந்திருந்தது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாளை (இன்று) விரிவாக பேசுகிறேன் என்று நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசியிருந்தார் செங்கோட்டையன். அப்பொழுது, “ஜெயலலிதா வழியில் அதிமுகவுக்காக என்னை அர்பணித்துக் கொண்டேன். இரண்டு முறை எனக்கு வாய்ப்புகள் கிடைத்த போது இயக்கத்தின் நலனுக்காக விட்டுக் கொடுத்தேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எடப்பாடி பழனிசாமியை பரிந்துரைத்தேன். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதற்கு பிறகு 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் அவர் எடுத்த முடிவின் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. தோல்வி என்பதே இல்லை என்ற வரலாற்றை படைத்தவர் புரட்சித் தலைவர். ஒரு முறை தோல்வியை சந்தித்தால் அடுத்தமுறை வெற்றி என்ற இலக்குடன் சரித்திரம் படைப்பவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா எல்லோரையும் அழைத்துப் பேசினார். என்னிடமும் ஒரு மணி நேரம் பேசினார். நான் அப்பொழுது சொன்னது ஒரே கருத்து தான். நாம் இருப்பது 122 பேர் தான். 11 பேர் வெளியே இருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடக்கூடாது.
2024 தேர்தலுக்கு பிறகு 6 பேர் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். ஆனால் யாரையும் சந்திக்கவில்லை என்று அவர் பொய் சொன்னார். தொண்டர்களின் எண்ணங்களைத் தான் நாங்கள் பிரதிபலித்தோம். தற்காலிக பொதுச் செயலாளர் தான். நிரந்த பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. 53 ஆண்டு காலம் கட்சியில் இருக்கும் என்னை தற்காலிக பொதுச் செயலாளர் எப்படி நீக்க முடியும் என்பதை வழக்கறிஞர் மூலம் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதன்பின் வழக்கு தொடர்வேன். துரோகம் என்று சொன்னாலே அதற்கு நோபல் பரிசு எடப்பாடி பழனிசாமிக்குதான் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

