\
Semmalai Says Current Situation Forced Him to Leave AIADMK
செம்மலைPt web

”கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா” - அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.! பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது இக்கட்சியில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம்தரவில்லை, மனம் வேதனைப்படுகிறது. எனவே, நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
Published on
Summary

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல்கள், தேர்தல் தோல்வி, கே.பழனிசாமியின் நீக்கல் முடிவுகள் ஆகியவை கட்சியை பலவீனப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் கரைகிறதா என்ற வேதனையுடன், மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அதிமுகக்கு பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 46 இடங்களில் மட்டுமே வென்றதுடன் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் நடந்த பல்வேறு உட்கட்சிப் பிரச்னைகளில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் இவர்களின் ஆதரவாளர்களை பல்வேறு காலக்கட்டங்களில் அதிமுகவில் இருந்து நீக்கினார் அக்கட்சின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி. இவ்வாறு, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை நீக்கிய கே.பழனிசாமியின் முடிவே அதிமுகவின் தற்போதைய நிலமைக்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

AIADMK Whip Row Will Speaker Disqualify 25 MLAs?
இபிஎஸ், சண்முகம், வேலுமணிPt web

இந்தசூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி மற்றொரு கட்சிப் பிளவுக்கு வழிவகுத்துகிறது. தவெக அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வின் போது, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, திமுகவுடன் கூட்டணி வைத்து கே. பழனிசாமி முதல்வராக முயற்சித்தார் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இச்சூழலில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் கே. பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் அதிகரித்திருக்கிறது.

Semmalai Says Current Situation Forced Him to Leave AIADMK
கேரளத்தின் முதல்வரானார் வி.டி. சதீசன்.. 20 அமைச்சர்களும் பதிவியேற்பு.!

இந்நிலையில் தான், அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது இக்கட்சியில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம்தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது. எனவே, நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தலுக்குப்பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது.

இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?

''கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!

நோகுதய்யா; மனசு நோகுதய்யா"

என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.

Semmalai Says Current Situation Forced Him to Leave AIADMK
"என்னை முதல்வராக அறிவிக்க தயாராகினர்.." நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!

"உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது" என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. புரட்சித்தலைவர் அவர்களும் புரட்சித்தலைவி அவர்களும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

செம்மலை
செம்மலைPt web

மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப் படுகிறது. எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவில் நிலவி வரும் மோதலுக்கு மத்தியில், அக்கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவரான செம்மலை அதிமுகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Semmalai Says Current Situation Forced Him to Leave AIADMK
அதிமுகவில் தொடரும் குழப்பம்.. பொதுக்குழுவை கூட்ட முடிவு.. 1,050 பேர் கையெழுத்து?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com