\
Thirumavalavan Breaks Silence on Support Delay for TVK
விஜய் - திருமாவளவன்Pt web

"என்னை முதல்வராக அறிவிக்க தயாராகினர்.." நடந்தது என்ன? திருமாவளவன் விளக்கம்!

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
Published on

50 ஆண்டு காலத்திற்கு திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கடந்த முறை ஆட்சியில் இருந்த ஆட்சியில் இருந்த திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததுடன், பாஜக எதிர்ப்பை தீவிரமாக பேசிய போதிலும் அக்கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. எம்.ஜி.ஆர்-ஆல் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு, முதல்வர் விஜயின் தவெக தமிழக அரசியல் களத்தில் நினைத்துக் கூட பார்க்க முடிந்திடாத அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்
விஜய்Pt web

எனினும், தவெக 108 இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு போதிய இடங்கள் இடங்கள் கிடைக்காத சூழலில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்திருக்கிறது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். ஆரம்பத்தில் இருந்தே ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறி வந்த நிலையிலும், காங்கிரஸ் தவெகவுடன் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்திருக்கிறது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டதாக காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் கூறிவருகின்றனர். ஆனாலும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம்; தவெகவுக்கு வெளியில் இருந்தே ஆதரவளித்திருப்பதாகவும் விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தெரிவித்திருக்கின்றனர்

இதற்கிடையில் தான், திமுக அதிமுக கூட்டணி அமைத்து தமிழகத்தில் அரசமைக்க விரும்புவதாக தகவல் வெளியாகி அரசியல் தலைவர்கள் உட்பட தமிழக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இது வதந்திகளாகவே பார்க்கப்பட்டாலும், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதை உறுதிபடுத்தியிருந்தார். இதற்கு, இடதுசாரிகள் மறுத்துவிட்டன எனவும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

திருமாவளவன்
திருமாவளவன் pt web

தவெகவுக்கு ஆதரவா? என்பதை இடதுசாரிகளுடன் அறிவிப்பதாக தெரிவித்திருந்த திருமாவளவன், அவர்கள் தவெகவுக்கு ஆதரவளித்த பிறகும், தவெகவுக்கான ஆதரவு நிலைபாட்டை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தன்னை முதல்வராக்க முயலும் திட்டத்தை திருமாவளவன் பரிசீலிக்கிறார் எனக் கூறப்பட்டது. இத்தனை வகையாக கருத்துக்களுக்கு மத்தியில் தான், மே 9-ம் தேதி விசிக தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் அளித்ததன் மூலம் தற்போது தவெக ஆட்சி அமைத்திருக்கிறது.

இந்தசூழலில் தான், தவெகவுக்கு ஆதரவளிக்கத் தாமதமாக்கியது ஏன்? திமுக அதிமுக கூட்டணி பேசப்பட்டதா? என்பது குறித்தெல்லாம் விசிக தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதுகுறித்து அவர் பேசுகையில், தவெகவுக்கு ஆதரவளித்தது தாமதம் கிடையாது. எந்த முடிவாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலோசித்து எடுக்க வேண்டும். மேலும், இத்தனை ஆண்டுகள் கூட்டணியில் பயணித்த திமுக தலைவரிடம் மரியாதை நிமித்தமாக தகவல் தெரிவித்து விட்டு தான் வெளியில் அறிவிக்க வேண்டும் எனவே காலதாமதம் ஆகிவிட்டதாக தெரிகிறது. எங்களைப் பொறுத்தவரை தவெக ஆதரவு முடிவை வேகமாகவே எடுத்திருக்கிறோம்.

அதேசமயம், அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவையில் விசிக இடம்பெறுவதை தவெக தரப்பும் விரும்புவதாகவும், திருச்சி கிழக்கில் போட்டியிடவும் விரும்புவதாகவும் தம்மிடம் தெரிவிக்கப்பட்டது. பிறகு தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்ட விஜய், உங்கள் விருப்பம்போல் இருக்கலாம் என கூறினார்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அதிமுக கூட்டணி பேசப்பட்டதாகவும், தன்னை முதல்வராக்க முயற்சிகள் நடந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசுகையில், மே 5ஆம் தேதி திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தோம். அப்போது விஜய் ஆட்சி அமைப்பதை நாம் யாரும் இடையூறு செய்யக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். பிறகு 7ஆம் தேதி ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்தபோது, அதிமுக - திமுக ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருப்பதாகவும், பழனிசாமியை முதல்வராக்கலாம் என கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த முயற்சி நல்லதல்ல என்றும், திமுகவுக்கே பெரிய கேள்விக்குறியாகிவிடும் என நான் அவரிடம் கூறினேன்.

விசிக - திமுக
விசிக - திமுக Pt web

அதேபோல, என்னை முதல்வராக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தபின், செய்தியாளர் சந்திப்புக்கு புறப்பட்டபோது கூட, ஒரு தரப்பை சேர்ந்த நபர் தம்மை தொடர்பு கொண்டு, ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்றும், தம்மை முதல்வராக அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.ஆனால், அவரிடம் வேண்டாம் என நான் கூறி விட்டேன்” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - திமுக கூட்டணி பேசப்பட்டது என தகவல்கள் பரவி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவனே, திமுக - அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது எனவும் தன்னை முதல்வராக்க முயற்சிகள் நடந்தது எனவும் பேசியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

Thirumavalavan Breaks Silence on Support Delay for TVK
அதிமுகவில் தொடரும் குழப்பம்.. பொதுக்குழுவை கூட்ட முடிவு.. 1,050 பேர் கையெழுத்து?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com