கேரளத்தின் முதல்வரானார் வி.டி. சதீசன்.. 20 அமைச்சர்களும் பதிவியேற்பு.!
கேரள சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், 25 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் கொண்ட, எதிர்க்கட்சித் தலைவராக இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றிய வி.டி. சதீசன் இன்று கேரளத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற ரேஸ் நீண்டுகொண்டிருந்தது. இறுதியில் 25 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் கொண்ட, எதிர்க்கட்சித் தலைவராக இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றிய விடி சதீசன், தேசிய தலைமையால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று (மே 18) பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில், மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் ஆகியோர் பங்கேற்றியிருக்கின்றனர். தொடர்ந்து, அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் முன்னாள் கேளர முதல்வர் பினராயி விஜயனும் இவ்விழாவில் பங்கேற்று இருக்கிறார். .
20 அமைச்சர்கள் பதவியேற்பு
இதற்கிடையில், நேற்று தன்னுடன் சேர்த்து 21 பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலை விடி சதீசன் நேற்று வெளியிட்டிருந்தார். அதன்படி காங்கிரஸில், ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப், பிந்து கிருஷ்ணா, ஏ.பி.அனில் குமார், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு, ரோஜி எம்.ஜான், டி.சித்திக், ஓ.ஜே.ஜனீஷ், கே.ஏ.துளசி அறிவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், முதல்வருடன் சேர்த்து 20 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
விஜய் பங்கேற்பு இல்லை
தமிழக்த்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள தமிழக காங்கிரஸ் தவெகவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்தசூழலில் தான், மே-10 ஆம் தேதி நடைபெற்று முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் நாடளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். மேடையில் எடுத்த ராகுல் மற்றும் விஜயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்று வரும் கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்விழாவில் விஜய் பங்கேற்கவிருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
எனினும், முதல்வர் விஜய் கேரளா செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், அவர் அவ்விழாவில் பங்கேற்பாரா? எனக் கேள்வி எழுந்து வந்த நிலையில், இன்று நடைபெற்றிருக்கும் கேரள முதல்வர் விடி சதீசனின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்ளவில்லை.

