பாமக தலைவர்களை தொடர்ச்சியாய் சந்திக்கும் செல்வப்பெருந்தகை.. இரு கட்சிகளிடையே கருத்து மோதல்..!
பட்டாளி மக்கள் கட்சியில் ஏற்கனவே உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில், அண்மையில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், பாமகவையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி என பேசப்பட்டது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த செல்வப்பெருந்தகை, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என பல முறை விளக்கமளித்திருந்தார்.
ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறக் கூடுமென அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இவ்வாறான சூழலில், காங்கிரஸ் கட்சியை விட வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெறுவோம் என விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூரின் சமூகவலைதளப் பதிவும், இவ்விவகாரத்தை மையப்படுத்தி இருந்ததால், காங்கிரஸ், விசிக இடையே கருத்து மோதல் உருவானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செல்வப்பெருந்தகை, ராமதாசையும், ஜி.கே.மணியையும் சந்தித்தது மரியாதை நிமித்தமாகவே, அதில் அரசியல் பேசவில்லை என மீண்டும் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போன்று பதிலளித்தார்.
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்ட நிலையில், இவ்வாறான செய்திகளால் கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என காங்கிரஸ் மற்றும் விசிக தரப்பு விளக்கமளித்துள்ளது.