எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்.. செங்கோட்டையன் மீது சீமான் விமர்சனம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோபிசெட்டிப்பாளையத்தில் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போது விஜய் போன்ற திரை நட்சத்திர அரசியல்வாதிகளுடன் இணைந்தும் மக்களுக்கு மாற்றமில்லை என கடுமையாக விமர்சித்தார். திரை முகங்களை அல்ல, தத்துவத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 5.73 கோடி வாக்களர்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்மனுத்தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை களத்தில் உள்ள இச்சூழலில் தான், தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை செய்து வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இன்று பரப்புரை செய்தார். கோபிசெட்டிப்பாளையம் தொகுதி முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் போட்டியிடும் தொகுதியாக இருப்பதால் நட்சத்திர தொகுதியாக உள்ளது. ஏற்கனவே, இந்த தொகுதியில் மட்டும் 9 முறை செங்கோட்டையன் வென்றிருக்கிறார்.
இந்த சூழலில் தான், கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
சீமான் பேசும்போது, கோபிசெட்டிபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினராக 9 முறை இருந்த செங்கோட்டையன் இப்போது புதிய கட்சிகளில் இணைவதால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது. அவர், முதலில் எம்.ஜி.ஆர் உடன் இருந்தார். அடுத்து, ஜெயலலிதா உடன் இருந்தார். தற்போது விஜயுடன் சேர்ந்திருக்கிறார். திரையில் நடிப்பவர்களைப் பார்த்துச் செல்லாமல், தத்துவத்தைப் பார்த்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்று மக்கள் கேட்பதில்லை. தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்க எவரும் முன்வருவதில்லை. மக்களை ஏமாற்றுவதையே 'நலத்திட்டங்கள்' என்று அழைக்கிறார்கள். 15 ஆண்டுகளாக நான் கத்துவது எனக்காக அல்ல; மக்களுக்காகவே. எத்தனையோ பண ஆசைகள் காட்டப்பட்டும் மக்களுக்காகவே நான் நிற்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

