கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை – சீமான்
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை ராமாபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....
முன்பு இருந்தது போல இப்போது திரை உலகம் இருக்கிறதா?
கேளிக்கை வரியை குறைப்பதால் திரைத்துறைக்கு என்ன நன்மை..? ஒரே ஒரு நிறுவனம், ஒரே ஒரு குடும்பம் மொத்த படங்களையும் வாங்கி விநியோகம் செய்கிறது. முன்பு இருந்தது போல இப்போது திரை உலகம் இருக்கின்றதா?. ஒரு திரைக்கலைஞரையோ ஒரு வினியோஸ்தரையோ யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்?. அவர்கள் நினைக்கின்ற படம் தான் வெளியாக வேண்டும். அவர்கள் நினைக்காத படம் வெளியாகாது அது மாதிரி தான் இருக்கின்றது.
இதற்கு முன்பு கோரிக்கைகள் வந்ததில்லையா? வைத்ததில்லையா?
கேளிக்கை வரியை யாருக்காக குறைத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். தயாரிப்பாளர் சங்கமும் கமல்ஹாசனும் வைத்த கோரிக்கையை ஏற்று கேளிக்கை வரி குறைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். இதற்கு முன்பு கோரிக்கைகள் வந்ததில்லையா? வைத்ததில்லையா? ஒரு தலைவன் என்பவன் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் தானாக சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் யாராவது கோரிக்கை வைத்தால் தான் சரி செய்வீர்களா?.
கேளிக்கை வரியை குறைக்கின்றீர்கள். மின் கட்டணம், சொத்து வரியை எப்பொழுது குறைப்பீர்கள்?
தேர்தலுக்கு ஆறு மாதங்களை உள்ள நிலையில், கேளிக்கை வரியை குறைக்கின்றீர்கள். மின் கட்டணம், சொத்து வரியை எப்பொழுது குறைப்பீர்கள்?. அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா. எத்தனை படங்கள் வெளியாகாமல் உள்ளது. எத்தனை படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் துறையை விட்டு விலகி சென்று விட்டார்கள்.
அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் என்றார் ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனாவும், என்.ஆனந்தும் கூட்டணி குறித்து பேசுவதற்கு பதில் அளித்த சீமான், ஆதவ் அர்ஜூனா பேசுவதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதே ஆதவ் அர்ஜுனா தான் துணை முதலமைச்சர் ஆக்குகின்றேன் அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் என்றார், என சீமான் கேள்வியெழுப்பினார்.