”அம்பாசமுத்திரத்தில் நான் போட்டியிடுகிறேன்” - முக்கிய முடிவை அறிவித்தார் சீமான்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். எனினும், 107 இடங்கள் மட்டுமே ஆதரவு இருந்த நிலையில், சட்டப்பேரவையில் தனித்து தனது பலத்தை காண்பிக்க முடியாததால் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தது தவெக.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து விட்ட நிலையில், திருச்சி கிழக்குடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதில், 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தம் தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். இதில், 2-லும் ஆளும் தவெகவே வெற்றி பெற்றிருக்கிறது.
இதற்கிடையில், மற்ற 5 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும் பட்சத்தில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்தச்சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துக் களம்காணும். குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நானே வேட்பாளராக நேரடியாகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். நவம்பர் 26-ல் நெல்லையில் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவும், நவம்பர் 27-ல் அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டமும் பிரம்மாண்டமாக நடைபெறும். அன்றிலிருந்து எங்கள் தேர்தல் களம் அனல் பறக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார். இப்போது, அவர் தவெகவில் இணைந்துவிட்ட நிலையில், அக்கட்சி சார்பில் அவரே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

