seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல், சீமான், விஜய்எக்ஸ் தளம்

வேங்கைவயல் விவகாரம் | அரசின் குற்றப்பத்திரிகைக்கு சீமான், விஜய் கண்டனம்!

வேங்கைவயல் விவகாரத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு தரப்பில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

அதில் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன், முரளி ராஜா ஆகிய 3 பேர்தான் இந்த செயலை செய்தது என்றும் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கவே இதுபோல் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் வேறு யாருக்கோ தொடர்பிருக்கும் நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேரை குற்றம்சாட்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல் விவகாரம்: விசிக, CPIM முதல் அதிமுக, தேமுதிக வரை.. குற்றப்பத்திரிகையில் தொடரும் அதிருப்தி!

அந்த வகையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

seeman and vijay  condemnation on vengaivayal issue
சீமான், விஜய் புதிய தலைமுறை

சீமான் கண்டனம்!

இதுகுறித்து சீமான், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா?‌ பேரவலம்! அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல் விவகாரம் | “சிபிசிஐடி கொடுத்தது அறிக்கையில் பெரிய பிழை இருக்கிறது” - எவிடன்ஸ் கதிர்!

ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது.

முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டு பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா?

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல் | “நீதான செஞ்ச.. ஒத்துக்கோ; கடிவாளம் கட்டியதுபோல் விசாரணை” விளக்குகிறார் எவிடன்ஸ் கதிர்!

சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான வன்கொடுமையாகும். வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும் எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும்.

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கை வயல் விவகாரம்முகநூல்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும். ஆகவே, முதல்வர் ஐயா ஸ்டாலின் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல் விவகாரம் | ”திமுக அரசின் கபட நாடகம் அம்பலம்” - எல்.முருகன் கண்டன அறிக்கை

தவெக தலைவர் விஜய் கண்டனம்!

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, காலதாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

seeman and vijay  condemnation on vengaivayal issue
வேங்கைவயல் விவகாரம்: விசிக, CPIM முதல் அதிமுக, தேமுதிக வரை.. குற்றப்பத்திரிகையில் தொடரும் அதிருப்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com