வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டிபுதிய தலைமுறை

வேங்கைவயல் விவகாரம் | ”திமுக அரசின் கபட நாடகம் அம்பலம்” - எல்.முருகன் கண்டன அறிக்கை

மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களின் கண்டன அறிக்கை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் திமுக அரசின் கபட நாடகம் அம்பலம்..
Published on

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் திமுக அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை குற்றச்சாட்டு

எல்.முருகன் கண்டன அறிக்கை விவரம்:-

"புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி குடிநீர் தேக்க தொட்டியில், சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் 750 நாட்கள் கடந்த பின்னரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை இழுத்தடித்து வந்தது.

நீதிமன்றம் பலமுறை குட்டு வைத்தும் கூட 'போலி திராவிட மாடல்' திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்தநிலையில், வேங்கைவயல் சம்பவத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரணை முடித்து தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்பரேட்டராக இருந்த சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

வேங்கைவயல்
வேங்கைவயல்pt web

முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தை, வெளியுலகிற்கு கொண்டு சென்று நீதி கேட்டவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள். ஆனால், அவர்களை குற்றவாளிகள் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புகார் கொடுத்தவர்களை குற்றவாளிகள் என கூறுகிறது தமிழக காவல்துறை. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதனை என்ற பெயரில் வழக்கில் சிக்க வைக்கவும் இந்த அரசு ஏற்கனவே முயன்று வந்தது. இதனை தொடக்கம் முதலே நான் சுட்டிக்காட்டி வந்தேன். இப்போது பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகள் என காவல்துறை கூறுகிறது.

புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தம் காரணமாக, இந்த கொடூர முடிவுக்கு காவல்துறை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறைக்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களுக்கு, முதமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் சமூகநீதி இது தானா?

புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே வழக்கை திருப்பும் இந்தக் கொடூரத்தை காவல்துறை யாருக்காக செய்கிறது?

பட்டியலின மக்கள் மீது கொடுமை நடக்கும்போதெல்லாம், திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது எதனால்?

வேங்கைவயல் கொடூரத்தை போலவே, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே, சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவத்திலும் காவல்துறை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டது.

அதனை ஆய்வு செய்த அதிகாரிகளை வைத்து, தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக திமுக அரசு நாடகமாடியது. அதுபோல தான் தற்போது வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கையும், வழக்கம்போல் திசை திருப்பும் முயற்சியில் ஆளும் திமுக அரசு இறங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

வேங்கை வயல் விவகாரம்
வேங்கை வயல் விவகாரம்முகநூல்

இந்த சம்பவங்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டைச் சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதுபற்றி பலமுறை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோதும் திமுக அரசு தொடர்ந்து தூக்கத்திலேயே இருக்கிறது.

உலகம் காணாத மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது, திமுக நடத்தி வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் தான். இதனை திமுகவினர் 'திராவிடப் பெருமை' எனப் பேசி வருவது வேதனையான ஒன்று.

சமூக நீதிக்கு தாங்கள் தான் சொந்தக்காரர்கள் என வாய் கிழிய பேசும் திமுக அரசு, தற்போது செய்வது என்ன என்பதை தமிழகம் மட்டுமல்லாமல் இந்த நாடே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

பட்டியலின மக்களை தங்கள் சுயலாப அரசியலுக்கு மட்டும் பயன்படுத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடம் நியாயம் கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, நான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன். திமுகவினரின் கைப்பாவையாக செயல்படும் தமிழக காவல்துறை, இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, இந்த வழக்கை இனிமேலும் தாமதம் செய்யாமல் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம், பட்டியலின மக்கள் நீதியை எதிர்பார்ப்பது நடவாத ஒன்று. இந்த வழக்கை விசாரிக்கும் உரிமையை தமிழக காவல்துறை இழந்து விட்டது. வழக்கு உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com