மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நாகையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழக்கே 940 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைக்கான அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கடலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.