விஜய்க்கு பெருகும் ஆதரவு.. இரண்டாக உடையும் அதிமுக? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவை என்கிற நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு உட்கட்சிப் பூசல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இதையடுத்து, அது அடுத்தகட்டமாக ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரத்தில், அக்கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவை என்கிற நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது.
இந்த நிலையற்ற சூழலுக்கு மத்தியில், அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கட்சித் தலைமை இன்னும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காத நிலையில், அதற்குள் இருக்கும் ஒரு பிரிவு விஜய்க்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக பிரிவு, தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஆதரவைத் திரட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சி.வி.சண்முகம் தலைமையில் கூட்டாக வரும் படை, விஜய்க்கு நெருக்கடியைத் தணித்து நீண்டகால ஆட்சியமைப்பதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சிவி சண்முகம் வீட்டில் 35 அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக பல தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக இரண்டு மக்களவைத் தேர்தல்களும், இரண்டு சட்டமன்றத் தேர்தல்களும் அடங்கும்.
இதன் காரணமாகவே, அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் எதிர்க்கட்சியில் நீடிப்பதற்கோ அல்லது வேறு கட்சிகளுடன் இணைவதற்குப் பதிலாக விஜய்க்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் தற்போது 47 உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். இன்னொரு புறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், பலதரப்பிலும் தவெகவுக்கு ஆதரவு பெருகுவதால், மாநிலத்தில் வரும் நாட்களில் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் உருவாகலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

