‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்..’ - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயித்த கதை!
தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனை ஜெயலலிதா. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியல் களத்தில் அரியாசனத்தில் அமர்ந்து அதிகார மையமாக மாறிய முதல் பெண் அவர். கடுமையான சவால்கள் நிறைந்த அரசியலில் ஒன்பதே ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க எழுச்சி பெற்றவர் ஜெயலலிதா.
இளம் வயதிலேயே திரைத்துறையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா 1982இல் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்புச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1987இல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்தது. அப்போது ஜானகி முதலமைச்சரானார்.
பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற நிலையில் அவர் அரசியல் களத்திலிருந்து விலகினார். இதன் பின் ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளராக தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஜெயலலிதா. 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது.
தொட்டில் குழந்தை திட்டம், காவல் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு விலையில்லா ஆடுமாடுகள், கோயில்களில் அன்னதானம், திருநங்கைகளுக்கு மாத உதவித் தொகை என பல்வேறு திட்டங்களை தமது ஆட்சி காலத்தில் கொண்டு வந்தவர்.
2016ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 70 நாட்கள் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு இதே நாளில் ஜெயலலிதா காலமானார். தன் ஈடு இணையற்ற ஆளுமை குணத்தாலும் துணிச்சலான முடிவுகளாலும் அரசியலிலும் அரசிலும் முத்திரை பதித்தவர் ஜெயலலிதா.
1996 தேர்தலில் மிக மோசமான தோல்வி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் என பல பின்னடைவுகளை சந்தித்தாலும் சாதுர்ய அரசியலால் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்றார். 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் பயணம், ஆறு முறை முதலமைச்சர், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர் என தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத ஆளுமையின் நினைவு தினம் இன்று.