மானாமதுரை | டார்ச் வெளிச்சத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை; விமர்சித்த இபிஎஸ்... விளக்கமளித்த அமைச்சர்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுடன் வந்தவருக்கு டார்ச் வெளிச்சத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் பாலமுருகன். சொத்து தகராறு காரணமாக தங்கமணி என்பவர் தரப்பினர் பாலமுருகனை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ பணியாளர்கள் முதலுதவி செய்தனர். மேலும் மருத்துவர் இல்லாமல் மருத்துவ பணியாளர்களே அவருக்கு தையல் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சொத்து தகராறு குறித்து புகார் அளித்ததற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மருத்துவமனைக்கு வந்த காவலர்களிடம் பாலமுருகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வெளியிட்டிருந்தார். இது குறித்த பதிவில், “சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார். மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில் ஜெனரேட்டரும் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால், டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்” என பதிலளித்துள்ளார்.