“நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்” - ஆர்பி உதயகுமார் வைக்கும் கோரிக்கை யாருக்கு?
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், தவெக நாதகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஏன் அழைப்பு விடுக்கிறார்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “அதிமுக பிரதான கட்சியாக திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் திமுகவை எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் எதிர்ப்பின் நோக்கம் நிறைவேறும். திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆட்சிக்கு மாறான கருத்துகளை சொல்லுகின்றனர். 20% ஆதரவு 80% எதிர்ப்பு எனும் நிலையில் உள்ளனர்.
திமுகவை எதிர்க்கும் கட்சிகளிலேயே 50 ஆண்டு கால வரலாறும் மக்கள் நம்பிக்கையும் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே, திமுக எதிர்ப்பு என்பது பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக்கூடாது. அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல்கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் நோக்கம் நிறைவேறும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரிடம் அன்வர்ராஜா விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியை பாதிக்காது. அதை பொதுவிவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம்; எலி, அணில் இடையில் பாடும், ஓடும் செல்லும் அதையெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை” எனத் தெரிவித்தார்.
பின்னர் பல கட்சிகள் அதிமுகவோடு இணைய பாஜக தடையாக உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்” எனத் தெரிவித்தார். கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற கேள்விக்கு, ”பொறுத்திருந்து பாருங்கள். கூட்டிக் கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும். எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்” எனத் தெரிவித்தார். நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு, “ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்” எனப் பேசினார்.